நடிகை காஜல் அகர்வால் 2004-ம் ஆண்டு இந்தியில் துணை நடிகையாக அறிமுகமாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு பழனி படம் மூலம் தமிழில் கதாநாயகியானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் படங்கள் குவிந்தன. கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல, விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, ஜில்லா, தனுசுடன் நடித்த மாரி, விஷாலுடன் நடித்த பாயும்புலி படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்தது.
சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தினார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஆனால் அங்கு தனது சம்பளத்தை ரூ.1 கோடி என்று மட்டுமே நிர்ணயித்து இருக்கிறார். தமிழில் மட்டும் அதிக சம்பளம் வாங்கி வந்தார். இந்தநிலையில் விஜய் ஜோடியாக மெர்சல் படத்திலும் அஜித்குமார் ஜோடியாக விவேகம் படத்திலும், நடிக்க வாய்ப்புகள் வந்தன.
இரண்டு பெரிய நடிகர்களுடன் ஒரே நேரத்தில் நடிப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது இரண்டு படங்களும் திரைக்கு வர தயாராகி உள்ளன. விவேகம் படம் இந்த மாதம் இறுதியில் வருகிறது. மெர்சல் தீபாவளிக்கு வெளியாகிறது. இரண்டுமே பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளன.
இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளன. அதிக வசூல் குவிக்கும் என்றும் வினியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நம்புகின்றனர். ராஜாராணி, தெறி படங்களை இயக்கி பிரபலமான அட்லி மெர்சல் படத்தையும் சிறுத்தை, வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவா விவேகம் படத்தையும் டைரக்டு செய்துள்ளனர்.
விவேகம், மெர்சல் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவதை தொடர்ந்து காஜல் அகர்வால் தனது சம்பளத்தை ஒன்றரை கோடியில் இருந்து மேலும் உயர்த்தி இருக்கிறார். ரூ.2 கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் வாங்கி முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.