கலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்!!

News
0
(0)

கடந்த 7-8-2018 அன்று மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் ஒன்றுதிரண்டு, சென்னை காமராஜர் அரங்கில்13-8-2018 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் நினைவஞ்சலி செலுத்தினார்கள். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள்,தயாரிப்பாளர்கள், கருணாநிதி குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“கலைஞர் இல்லாத நாட்டை என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு பெரிய அடையாளத்தை இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரிய விழா என்றால் இனி யாரை அழைப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய மனிதர் என்று யாரை சந்திக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும், நாற்பத்தைந்து வயதில் ஒரு கட்சிப் பொறுப்பை ஏற்று எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள், எல்லாவற்றையும் தாண்டி கழகத்தை கட்டிக் காப்பாற்றி ஐம்பது ஆண்டு காலங்கள் தலைமை தாங்கிய பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. ஐம்பது ஆண்டுகளில் அரசியலில் தன்னந்தனியாக மேடையில் நின்று அரசியல் களத்தில் யாராவது வந்தால் என்னோடு நட்புகொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் தாளங்கள் போட்டு புகுந்து விளையாடியவர் கலைஞர்.

அவரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் தொண்டர்கள், முழுமையாக அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள், அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர்கள். யாரும் தவறாகக் கொள்ளக் கூடாது, அ.தி.மு.க. வின் ஆண்டு விழா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது, பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும். அ.தி.மு.க. உருவானதே கலைஞரால் தான். அவர் கட்சியில் இருந்து தூக்கப்பட்டார். அதற்கு பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பது வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். அத்தனை வஞ்சனைகளையும் தாண்டி தன் உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார். அவர் அரசியல் பயணங்களைப் பற்றி பேச இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும். இலக்கியம் பார்த்தால் அதில் அவர் செய்யாத சாதனை இல்லை. இருட்டில் இருந்த சரித்திர நாயகர்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்கள், சிற்றரசர்கள், போன்ற வெளிச்சம் படாத வீரர்களையெல்லாம் தன் சொல்லாலும், எழுத்தாலும், பாமரர் முதல் பண்டிதர் வரை கொண்டுபோய் சேர்த்தவர் கலைஞர். சினிமா பயணம் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை. இரண்டு பெரிய இமயங்கள் உருவாக்கியது கலைஞர். நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை ஸ்டாராக்கியது மலைக்கள்ளன் படத்தில், சிவாஜி கணேசனை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியதும் கலைஞர் தான்.

கலைஞர் மறந்தார் என்ற செய்தி கேட்டவுடனே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருடன் நான் கழித்த நேரங்கள் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. டிவியில் பார்த்தேன் மக்கள் கூட்டம், இருந்தாலும் பரவாயில்லை என்று சென்றேன். ஆனால் என்னால் பார்க்கமுடியாமல் திரும்பி வந்துவிட்டேன். மீண்டும் அதிகாலையிலேயே காலையில் சென்றேன். பல ஆயிரம் கூட்டங்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். எங்கே அவரது உடன் பிறப்புகள், அவர்களுக்காக எவ்ளோ உழைத்திருக்கிறார். தமிழக மக்கள் மீது கோபம் வந்தது. ஆனால் அதன் பிறகு அலை அலையாய் கட்டுகடங்காத கூட்டத்தைப் பார்த்து வியந்தேன்.

தமிழக மக்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள். பதவியில் இல்லை, வயது முதிர்வு, ஆனாலும் முப்படை வீரர்களும் தகுந்த மரியாதைக் கொடுத்தார்கள். இருப்பினும் ஒரு குறை எனக்கு, அண்டை மாநில முதலமைச்சர்கள், அத்தனை தலைவர்கள் இருக்கும்போது தமிழ்நாட்டு முதல்வர் இருக்க வேண்டாமா? மந்திரி சபையே இருக்க வேண்டாமா? இதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலிதாவா? என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும் அவருக்கு மெரினாவில் மேல்முறையிட்டுக்கு போகாமல் இடம் கொடுத்தது ஆறுதல். ஸ்டாலின் குழந்தைப் போல் கண்ணீர் வடித்தது பார்த்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவலை வேண்டாம். அந்த மாமனிதரின் ஆத்மா உங்களுக்கு வழிகாட்டும். அவருடன் நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன், நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

மேலும், “கலைஞருக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால், நானே வீதியில் இறங்கி போராடி இருப்பேன்” என்று கூறினார். ரஜினியின் இந்த பேச்சை, முன்பு அவர் பேசிய “எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகத் தான் மாறும்” என்றதோடு ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.