full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கலகலப்பு 2 – விமர்சனம்!

கால் கிலோ காமெடி, கால் கிலோ லாஜிக்கே இல்லாத கதை, கால் கிலோ கவர்ச்சி டான்ஸ் பாடல்கள், கால் கிலோ கும்பல் கும்பலா ஆர்ட்டிஸ்ட் என மொத்தமாய்ப் போட்டு அரை அரையென்று அறைத்து கொஞ்சமாய் திரைக்கதையை மிக்ஸ் செய்தால் சுந்தர்.சியின் ட்ரேட்மார்க் கமெர்சியல் சினிமா ரெடி.

ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, காத்ரின் தெரசா, நிக்கி கல்ரானி, யோகி பாபு, சதீஸ், ரோபோ சங்கர், மதுசூதனன், ராதாரவி, விடிவி கணேஷ், சிங்கம்புலி, விச்சு, சிங்கமுத்து, சந்தான பாரதி, மனோ பாலா, அறந்தாங்கி நிஷா…. அப்பப்பா மூச்சு முட்டுகிறது. சொந்தக் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் என்பதாலோ என்னவோ இருக்கிற நடிகர்களையெல்லாம் அமுக்கிப் பிடித்திருப்பார் போல சுந்தர்.சி.

நிறைய நடிகர்கள் இருப்பதால் என்னவோ, ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சம் பெர்ஃபார்மன்ஸ் ஸ்கோப்பை பிச்சு பிச்சு தந்திருப்பதால் யாருமே முழுதாக நம்மை ஆகிரமிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருப்பவர்கள் மிர்ச்சி சிவாவும், யோகி பாபுவும் தான். ஜீவாவும், ஜெய்யும் ரொமான்ஸ் செய்தும், டான்ஸ் ஆடியும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகால தனது சினிமா அனுபவத்தில், ஹீரோயின்களுக்கு எந்த மாதிரியான வாய்ப்பை சுந்தர்.சி வழங்கி வந்தாரோ, அதேதான் கேத்தரின் தெரஸாவிற்கும், நிக்கி கல்ரானிக்கும். பாட்டுக்கு டான்ஸ் ஆடுறது, ஹீரோவை லவ் பன்றது!

என்னதான் கதை?

காசியில் ஒரு இளைஞன் தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஓட்டை லாட்ஜை நடத்திக் கொண்டிருக்கிறான். சென்னையில் ஒரு இளைஞன் அம்மாவின் ஆபரேஷன் செலவிற்கு காசில்லாமல், தன்னை தவிக்க விட்ட சாமியார் அப்பாவைக் கொல்லப் போகிறான். அப்போது அவனது அப்பா தனது பூர்வீக சொத்து காசியில் இருப்பதாக சொல்கிறார், அதை மீட்டால் உன் கஷ்டமெல்லாம் தீர்ம் என அறிவுரை சொல்கிறார்.
அப்பாவின் பேச்சைக் கேட்டு காசிக்குப் போனவன் ஒரு லாட்ஜில் தங்குகிறான். அந்த லாட்ஜை நடத்துபன் தான் முன் சொன்ன “தங்கச்சி கல்யாணம்” இளைஞன். அவனுக்கோ தங்கச்சி மாப்பிள்ளையின் தஙச்சியை பார்த்ததும் காதல். அவனுக்கு கடன் கொடுத்த சேட்டின் மகள், பார்ட் டைம் பரத நாட்டிய தாசில்தார் மீது “அம்மா ஆபரேஷன்” இளைஞனுக்கு காதல்.

இதற்கிடையே ஒரு அரசியல்வாதியின் முக்கியான ஊழல் ரகசியங்களைக் கைப்பற்றிய ஆடிட்டர், ஐந்து கோடி பணம் கேட்டு அரசியல்வாதியை மிரட்டுகிறார். அதன்படி பணத்தைக் கொடுத்துவிட்டு ரகசியத்தை மீட்பதற்காக தனது விசுவாசியான போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை காசிக்கு அனுப்புகிறார் அரசியல்வாதி. போன இடத்தில் போலீஸ் உயரதிகாரிக்கு பண ஆசை வர, ஆடிட்டரை கொன்றுவிட திட்டமிடுகிறார்.

இதற்கிடையில் ஒரு சாமியார் அந்த லாட்ஜை ஆட்டையைப் போட திட்டமிட, இதற்கிடையில் ஒரு திருட்டுக் கும்பல் அமெரிக்க ரிட்டர்ன் என்று பொய் சொல்லி தத்துப் பிள்ளையாய்ப் போய் அங்கிருக்கும் பரம்பரை சொத்தை அபரிக்க நினைக்க.. என ஏகப்பட்ட “இதற்கிடையில்” கதைகள் படத்தில். இறுதியில் வழக்கம்போல் பொட்டித்துக்கிப் போட்டு விளையாடி, உருட்டுக் கட்டையால் அடித்து மயங்கி என் அக்மார்க் சுந்தர்.சி பட கிளைமாக்ஸோடு படம் சுபமாகிறது.

காமெடி மட்டும் இல்லையென்றால் இந்தப் படம் உப்புசப்பில்லாமல் போயிருக்கும். ஆனாலும் இந்த “டபுள் மீனிங்”, “ட்ரிபிள் மீனிங்” வசனத்தையெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காமெடி என்று ஏமாற்றுவார்களோ?.. நிறைய அருவெறுக்கத் தக்க “டபுள் மீனிங்” உண்டு வெட்கம் விட்டு சிரிப்பதற்கு (?) இப்படத்தில்.

ஹிப்-ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓகேய்!. யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் காசியை அழகாகக் காட்ட முயற்சித்து, கூட்டம் கூட்டமாய் சுற்றும் காவிக் கொடிக் கோஸ்டியினரையேக் காட்டியிருக்கிறார்கள்.

எந்த எதிர்கேள்வியும் கேட்காமல், சிரித்து மகிழ்ந்திருக்க இந்த “கலகலப்பு-2” 60 சதவீதம் உத்திரவாதமான படம்!!