கிருஷ்ணசாமி இயக்கத்தில் வம்சி கிருஷ்ணா, கதிர், களஞ்சியம், குஷி, செந்தில் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் களவு தொழிற்சாலை.
சர்வதேச சிலைக்கடத்தலை மையக்கருவாகக் கொண்டு இப்படத்தில் மான் கராத்தே, தனி ஒருவன், குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்த வம்சி கிருஷ்ணா, சர்வதேச சிலைக்கடத்தல்காரனாக நடித்திருக்கிறார். இவர் தஞ்சாவூரில் உள்ள பழமையான ஒரு கோவிலில் இருக்கும் பல நூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரகத லிங்கத்தை கடத்துவதற்கு திட்டம் தீட்டுகிறார்.
வம்சி கிருஷ்ணா நேரடியாக களத்தில் இறங்காமல், அந்த ஊரில் ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விநாயகர் சிலைகளைத் திருடி விற்கும் கதிரை ஈடுபடுத்த நினைத்து அவரை அணுகுகிறார். முதலில் தயக்கம் காட்டும் கதிர், தன்னைக் காதலிக்கும் குஷியைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகும் ஆசையில் ஒப்புக்கொள்கிறார்.
இவர்களின் சிலைக் கடத்தல் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
சர்வதேச சிலை கடத்தல்காரனாக வம்சி கிருஷ்ணா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதிர், குஷி, களஞ்சியம் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். சிரிப்பு போலீஸ்காரராக வரும் காமெடி நடிகர் செந்தில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
நீண்ட காலமாக மூடிக்கிடக்கும் கோவிலுக்கு அடியில் உள்ள பழங்கால சுரங்கப்பாதையை தத்ரூபமாக வடிவமைத்த வகையில் கலை இயக்குநர் முரளிராமின் உழைப்பு வெளிப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் தியாகராஜன் திருவிழாக்காட்சிகள் மற்றும் சுரங்கப்பாதைக்குள் பயணிக்கும் காட்சிகளை அற்புதமாக படமாக்கியிருக்கிறார். ஷியாம் பெஞ்சமினின் பின்னனி இசை பரபரப்பான காட்சிகளில் கைகொடுத்திருக்கிறது.
கதையுடன் ஒட்டாத கதிர், குஷியின் காதல் மனதிலும் ஒட்டவில்லை. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிலைக்கடத்தலை விறுவிறுப்பான திரைக்கதையில் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர்.
சினிமாவின் பார்வையில் ‘களவு தொழிற்சாலை’ – வேலை செய்கிறது.