சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்

General News News
0
(0)

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்

 

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்!

பெர்ப்லெக்ஸிடி ஏஐ

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்று சாட்ஜிபிடி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது தொடாத பகுதிகளிலும் கூட சிறப்பாகச் செயல்பட, கூடுதல் திறன்களோடு பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனம் வந்திருக்கிறது.

சாட்ஜிபிடி என்பது படைப்புத் துறையிலும் உரையாடலிலும் பொதுத் தேவைகளுக்காகவும் பணியாற்றுகிறது எனில், பெர்ப்லெக்ஸிடி ஏஐ என்பதுஆய்வு நோக்கங்களுக்காகவும், உண்மை சரிபார்ப்புக்கும் பொருத்தமானதாக உள்ளது. கூகிளுக்கு நிகராக அல்லது அதை விட அதிகமான சாத்தியங்களைக் கொண்ட நிறுவனமாக பெர்ப்லெக்ஸிட்டியை உலகத்தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள். சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்ற தொழில்நுட்ப ஆளுமையாகவும், செயற்கை நுண்ணறிவுத்துறையின் முகங்களுள் ஒருவராகவும் அரவிந்த் ஶ்ரீநிவாசன் மதிப்பிடப்படுகிறார்.

*சென்னைத் தமிழன்*

பெர்ப்லெக்ஸிடி ஏஐ, 2022ல், சான் ஃப்ரான்சிஸ்கோவில், செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இயந்திரக் கற்றல் துறையிலும் விற்பன்னர்களான நான்கு பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தேடுபொறி நிறுவனம். இந்த நால்வரில் முதன்மையானவர், இதன் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ். சென்னையைச் சேர்ந்தவர். சென்னை ஐஐடியில் பயின்றவர்.

ஓப்பன் ஏஐ அமைப்பில் ஆராய்ச்சியாளராக இருந்தவர் அரவிந்த் ஶ்ரீநிவாஸ். மற்ற மூன்று பொறியாளர்கள்: ஆண்டி கோன்வின்ஸ்கி, டெனிஸ் யரட்ஸ், ஜானி ஹோ ஆகியோர்.

*சாதனைத் தமிழர்களின் சந்திப்பு*

இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, பேரளவில் வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் இந்திய திரைவானின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசன்.

இந்தச் சந்திப்பைக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன்,

சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. க்யூரியாசிடி கில்ஸ் த கேட் என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத் தொடர் உண்டு. ஆனால், இங்கே க்யூரியாசிடி பூனையைக் கொல்லவில்லை; அரவிந்த் ஸ்ரீநிவாஸை உருவாக்கியிருக்கிறது! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

*அரவிந்த் ஶ்ரீநிவாஸ் ட்வீட்*

கமல்ஹாசன் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, “பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்னும் கற்பதிலும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது. நீங்கள் இப்போது பணியாற்றிவரும் ‘தக் லைஃப்’ திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.