அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் கமல் சந்திப்பு

News

ரஜினியின் அரசியல் பிரவேசம் வெளிப்பட்டது முதலே நடிகர் கமல்ஹாசன் தனது பங்கிற்கு அமைச்சர்கள், ஊழல், நீட், டெங்கு, காந்தி குல்லா என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தார். கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் தீவிர அரசியலில் விரைவில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சராகி தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஆசை என்றும் அறிவித்திருந்தார்.

அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி என பல இடங்களில் தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசி வந்த கமல் ஆளுங்கட்சியை கடுமையாக சாடி வந்தார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக பேசினார்.

இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து கமல் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் கமலின் அரசியல் வருகை மற்றும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.