நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ தொண்டு நிறுவனம் சார்பில் ‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்.
இந்த சாதனை நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் நடைபெறுகிறது.
இதில் மாணவர்கள், சினிமா பிரபலங்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான விழிப்புணர்வு போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, இந்த சாதனைக்கு உதவும் சத்தியபாமா பல்கலைக்கழகம், டிரன்ஸ் இந்தியா ஆகியவற்றின் நிர்வாகிகள் மரியா ஜுனா ஜான்சன், ராஜேந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கமல்ஹாசன், “நானும் ஒரு விவசாயிதான். பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து நாமும் மாறுவோம். மாற்றுவோம். நமது அஜாக்கிரதையால் நதிகள் சாக்கடை ஆகும். நிலங்கள் பாலை ஆகும்.
நாட்டு விதைகளை தவிர்த்து வியாபாரத்துக்காக மாற்று விதைகளை கொண்டு வந்தனர். இதனால் 70 சதவீத பாரம்பரிய விதைகள் அழிந்துவிட்டன. இப்போது 30 சதவீத பாரம்பரிய விதைகள்தான் இருக்கின்றன. அதை காக்க வேண்டியது நமது கடமை. அந்த நிலையை உருவாக்குவோம். நாமும் ஒரு விவசாயியாக மாறி மாற்றுவோம்.
உணவில் உள்ள சத்துக்களை சாப்பிடுவதற்காக பூச்சிகள் வருகின்றன. அதை சாப்பிடும் பூச்சிகளைக் கொல்வதற்காக மாற்று விதையில் நஞ்சை ஏற்றுகிறார்கள். அந்த விஷம் நம்மையும் படிப்படியாக கொல்லும் என்பதை அறிய வேண்டும்.
எனவே, இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளில் உருவாகும் உணவுகளை உண்போம். வீட்டு மாடியில் நமக்கு தேவையானதை பயிரிடுவோம். நானும் என் வீட்டு மாடியில் அதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.
நம் நாடு அகிம்சைக்கு பெயர் போனது. எனவே இப்போதே பாரம்பரிய விதைகளை விதைக்கும் புரட்சியை இப்போதே தொடங்குவோம். இல்லை என்றால் நாளை ரத்தப்புரட்சி ஏற்படும். எனவே நான் இதில் பங்கு கொள்வது மட்டுமல்ல. எனது நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்களும் இதற்கு உதவுவார்கள்.
எனக்கு பிடித்த பல பழங்களை சாப்பிடுவதையே நிறுத்தி விட்டேன். காரணம் எப்படி உருவாகின்றன என்பது எனக்கு தெரியும். எனவே, பாரம்பரிய விதைகளை விதைக்கும் இந்த புரட்சி வெற்றி பெற்றால் நாம் விஷ உணவில் இருந்து விடுபடலாம். இதற்கு இந்த சிறு குழு மட்டுமல்ல அனைவரும் உழைப்போம். இதில் நானும் சேர்ந்ததை பெருமையாகக் கருதுகிறேன்.” என்று பேசினார்.
முன்னதாக இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவும் ‘தோழமை 108’ அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் பெட்ரிசியன் கல்லூரி தாளாளர் ஜான்சன்ரெக்ஸ், நடிகர் ஆரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.