full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு கிடையாது : கமல்ஹாசன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் பேசியதாவது:-

என்னை சிறையில் அடைத்துப் பார்க்க சிலருக்கு விருப்பம். முடிந்தால் என்னை கைது செய்தும் பார்க்கட்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும்; சட்டம் என்னை பாதுகாக்கும்.

இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்து அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது.

எனக்கு அனைத்து ரசிகர்களும் தேவை. கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தேவை. முத்தக் காட்சியால் சீரழியாத கலாசாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியால் சீரழிந்துவிடுமா? நான் எதைச் செய்தாலும் விருப்பமுடன் தான் செய்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி ஏற்றுக்கொண்டேன். எதிர்மறை விமர்சனங்களை நேர்மையாக ஏற்றுக்கொள்கிறேன்.

தசாவதாரம் வெளியான போது என்னை கொண்டாடினார்கள், தற்போது எதிர்க்கிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் நான் எதிர்த்துப் பேசுவேன். அரசியல் குறித்து பேச எனக்கு விருப்பமில்லை. 37 ஆண்டுகளாக நற்பணி மன்றம் மூலமாக பல நன்மைகளைச் செய்துள்ளேன். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று முதலில் கூறியது நான்தான்.

ஐன கன மன பெங்காலி பாட்டு அதை முதலில் நாம் சரியாகப் பாடுவதில்லை. அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. ஏனென்றால் அது அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது. எனவே அதைக் கற்றுக்கொடுத்தேன் அதில் தவறில்லை.

மக்களுக்காக நான் என்றும் பேசுவேன். சினிமாவை நசுக்கும் எந்த வரியையும் விதிக்காதீர்கள். சாதி என்று பேசுகிறார்களே அதை முதலில் உங்களால் நீக்க முடியவில்லை. தமிழகத்தில் மட்டுமே சைவம் மதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அரசின் செயல்பாடு குறித்து மதிப்பெண் போடுவது என் வேலை இல்லை. ஓட்டு மட்டுமே போடுவேன், தமிழக அரசியலில் எனது பங்கும் இருக்கிறது.

அரசியலுக்கு நான் வரவேண்டிய அவசியமில்லை, நல்ல தலைவர் யாராவது வந்தால் போதும் என்றார்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.