மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.
சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரட்டை வரி விதிப்புக்கு தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படும் சூப்பர் ஸ்டாரும், நடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதில் சினிமா துறையில் உள்ள பலதரப்பட்ட தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், இரட்டை வரி விவகாரத்தில் திரைத்துறையினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினிகாந்த்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல், “முதலில் குரல் கொடுப்போம். பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.