ஆட்சியில் இருப்பவர்களுக்கு தொடை நடுங்குகிறது : கமல்

News

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் என்ன என்பதை கமல்ஹாசன் அறிவித்தார். தங்களது கட்சியின் முதல் வேலையே ஊழல் ஒழிப்பு தான், லோக் ஆயுக்தா மசோதாவில் தான் முதல் கையெழுத்திடுவேன், காவல் துறை சீரமைப்பு வாரியம் அமைக்கப்படும் என்றார்.

திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும் போது, “மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை, பாலிசி என்ன என்று கேட்கிறார்கள். மக்கள் நலம் தான் எங்கள் கொள்கை என ஏற்கனவே கூறி இருக்கிறேன். ஆனாலும் திரும்ப திரும்ப அதனையே கேட்கிறார்கள்.

அதனால் மய்யத்தின் கொள்கைகளை இங்கே விரிவாக அறிவிக்கிறேன். கர்நாடகத்திடம் இருந்து பெறவேண்டிய காவிரி நீரை நாம் பெற்றே தீரவேண்டும். அது நமது உரிமை. இதே போல் மற்ற மாநிலங்களிலும் இருந்து பெறவேண்டிய நீரையும் பெற நடவடிக்கை எடுப்போம்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மழை அதிக அளவில் பெய்கிறது. அதனை வீணாக்காமல் சிறு சிறு அணைகள் கட்டி சேமிப்போம். சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் திட்ட முறைகளை கொண்டு வருவோம். மண்ணின் தன்மை பற்றி ஆராய நில வள மருத்துவர்களை நியமிப்போம். அவர்களால் தான் மண்ணின் தன்மை பற்றி ஆராய்ந்து விவசாயிகளுக்கு சாகுபடி பற்றிய நல்ல அறிவுரைகளை வழங்க முடியும்.

தமிழகத்தில் தற்போது 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 30 சதவீத பெண்கள் போதுமான உணவு, உடற்பயிற்சி இன்றி அதிக உடல் எடையால் அவதிப்படுகிறார்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும். பெண்கள் தங்களது உடல் நலத்தை பேணுவதற்காக அவர்கள் விரும்பும் இடத்தில் உடற்பயிற்சி செய்வதற்கான பாதுகாப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

எல்லோருக்கும் கல்வி முக்கியமான ஒன்று. பள்ளி ஆசிரியர் நியமனத்தை நியாயமாக நடத்துவோம். நியமனமோ, பணி மாறுதலோ ஊழல் இன்றி வெளிப்படையாக இருக்கவேண்டும். ஆசிரியர்கள் நேர்மையாக இருந்தால் தான் தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கமுடியும். லஞ்சம் கொடுத்தால் தான் பணியில் சேர முடியும் என்ற நிலையை மாற்றிக்காட்டுவோம். பலகோடி கொடுத்து துணைவேந்தர் பதவியில் அமர்பவர்கள் தேச துரோகிகள். அவர்களால் உயர்கல்வியின் தரம் எப்படி உயரும். அதுபோன்ற விஷ செடிகளை வளரவிடாமல் தடுப்போம். திறன்மேம்பாடு பயிற்சி மையங்களை ஏற்படுத்துவோம். தொழிற்சாலைகள் அவசியம் தான். ஆனால் மக்கள் நலனிற்கு எதிராக உள்ள ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளை அனுமதிக்க மாட்டோம்.

காவல் நிலையங்களை நேர்மையாக செயல்பட வைப்போம், தமிழக காவல் துறை சிறப்பான காவல் துறை தான். தமிழகத்தில் 1.6 லட்சம் போலீசார் உள்ளனர். அவர்களில் பலர் வி.ஐ.பி. பாதுகாப்பிலேயே வீணடிக்கப்படுகிறார்கள். அவர்களது பிரச்சினைகளை தீர்க்க காவல்துறை சீரமைப்பு வாரியம் அமைப்போம். இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை தமிழகத்தில் 69 சதவீதம் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். இதனை குறைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், பேரிடர் காலங்களில் மீனவர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

ஊழல் ஒழிப்பு தான் எங்கள் முதல் வேலை. தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைந்தால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா அமைக்கும் மசோதாவுக்கு தான். அந்த அமைப்பை ஏற்படுத்தினால் தான் நான் உள்பட யார் ஊழல் செய்தாலும் கண்காணிக்க முடியும். ஓட்டுக்காக யாரிடமும் காசு வாங்காதீர்கள். செலவுக்காக நீங்கள் வாங்கும் காசு உங்களுக்கு இடப்படும் கைவிலங்கு என்பதை உணருங்கள்.

எங்கள் கட்சியின் கொள்கைகளை கூறி விட்டேன். இனியும் உங்கள் கொள்கை என்ன என கேட்காதீர்கள். எங்கள் கொள்கைகளை கேட்டு ஆட்சியில் இருப்பவர்களுக்கு தொடை நடுங்குகிறது. அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அந்த நாற்காலி இன்னும் எவ்வளவு நாள் வரை இருக்கும் என தெரியாது. இன்னும் 2 வாரங்களில் மக்கள் நீதி மய்யத்தின் ‘ஆப்’ வெளியிடப்படும். இதுவரை கட்சியில் சேர்ந்த அனைத்து தொண்டர்களின் கைகளிலும் அந்த ஆப் இருக்கும். அதன் பலன் என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது.

நமது தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்யவில்லை என்றால் தமிழக மக்கள் நடத்த உள்ள ஒத்துழையாமை இயக்கத்தினால் நாடு அதிரும். கர்நாடக தேர்தலுக்கு பின்னால் மத்திய அரசின் சூழ்ச்சிகள் இன்னும் அதிகரிக்கும். அவர்களுக்கு வேண்டியவர்கள் மூலம் அட்சதை போடுவது போல் எதையாவது செய்வார்கள். தமிழக மக்கள் அதனை நம்ப மாட்டார்கள். தமிழகத்தை மத்திய அரசு கைப்பாவையாக நினைத்து விளையாட பார்க்கிறது. அது நடக்காது. தமிழர்கள் விழித்தெழுந்து விட்டார்கள். நாங்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். அதனை மத்திய அரசு உணர்ந்து கொள்ளவேண்டும்.” என்றார்.

பேசி முடித்ததும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். கமல்ஹாசன் சினிமாவில் சிறப்பாக நடித்து இருக்கலாம். ஆனால் அவரது நடிப்பு அரசியலில் எடுபடாது என அமைச்சர் ஒருவர் கூறி இருக்கிறாரே என தொண்டர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன் அந்த அமைச்சர் தான் சார்ந்து உள்ள கட்சியில் சம்பளம் வாங்காமல் எனக்காக பிரசாரம் செய்கிறார். அவரது பணி தொடரட்டும். அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது என்பது உண்மை தான். நான் சினிமாவில் நடித்தது போல் அரசியலில் நடிக்க மாட்டேன். ஆனால் அந்த அமைச்சரால் அரசியலில் நடிப்பது போல் சினிமாவில் நடிக்க முடியுமா? என கேட்டார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கு இந்த சட்டம் உருவானதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கிறது. எனவே இந்த சட்டம் அப்படியே இருக்கவேண்டும் என்பது தான் எனது கருத்து. வன்கொடுமையால் பாதிக்கப்படும் சகோதரர்களை அரவணைக்கும் காலம் வரும் வரை அந்த சட்டம் அப்படியே இருக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழுவில் அரசியலே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி குப்பை கொட்டப்போகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அரசியலில் உள்ள குப்பையை அகற்றுவது தான் என் வேலை, அது அவர்களால் முடியும் என்றார்.

இது போல மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.