அரசியல் ரீதியாக தயாராக இருக்கிறேன் – கமல் விளக்கம்!!

News

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் “விஸ்வரூபம்”. அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே பல பிரச்சனைகளாஇ சந்தித்தது. இப்போது அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டிருக்கும் “விஸ்வரூபம் 2” படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வர்வேற்பைப் பெற்றிருக்கிறது.

இருந்தாலும் அதன் டிரைலரில் தமிழில் ஒரு மாதிரியாகவும், இந்தியில் ஒரு மாதிரியாகவும் கமல் வைத்திருப்பது திட்டமிட்டு செய்தது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கமலின் பேட்டி வருமாறு:-

“இதற்கு முன்பு எனது சில படங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திட்டமிட்டு என் படங்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது அத்தகைய சூழ்நிலை இல்லை. முன்பு விஸ்வரூபம் படத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அரசியல் கலந்திருந்தது. இப்போதும் அதே மாதிரி அரசியல் கலக்குமானால் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன். இதற்காக நான் என்னை தயார்படுத்தியுள்ளேன்.

விஸ்வரூபம் படத்தின் 2-வது பகுதி முதல் பகுதிக்கு தொடர்ச்சியாக உண்மையானதாக இருக்கும். வாசீம் முகம்மது காஷ்மீரி யார் என்பதை விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் தெளிவாக கூறியுள்ளோம். இந்தப் படத்தை நான் எனது அரசியல் பயணத்துக்கு எந்த விதத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை. ஒரு வேளை நான் படம் தயாரித்திருந்தால் அதை செய்திருப்பேன். ஆனால் இதில் நான் அரசியல் செய்யவில்லை.

என்னைப் பொறுத்தவரை அரசியல் வேறு, சினிமா வேறு. இதை குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த இரு வி‌ஷயத்திலும் மற்றவர்கள் குழப்பம் அடைந்தால், அதற்கு நான் பொறுப்பு ஏற்க இயலாது” இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.