full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது : கமல்

கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்பது தான் என்னுடைய கருத்து. நான் 21 வயதிலேயே அரசியலுக்குள் வந்துவிட்டேன். ஆனால், போட்டி அரசியலுக்குள் வரவில்லை. யார் வரவேண்டும்? யார் ஆள வேண்டும்? என்று தேர்ந்தெடுக்கும் அரசியலுக்குள் தான் வந்திருக்கிறேன்.

அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை எங்களுக்காக பணியாற்ற வாருங்கள் என்று சொல்லவேண்டும். அதைவிடுத்து தியாகம் செய்ய வாருங்கள் என்று சொன்னால், அவர்கள் அதை வேறுவிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்றார்.

மேலும், ரஜினி அரசியலுக்குள் வந்தால் அவரை ஆதரிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, அதற்கான பதிலை அறிவிக்கும் களம் இது கிடையாது. அது வேறு என்று சொல்லி பேட்டியை முடித்தார்.

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் கூறியதை வைத்து பார்க்கும்போது, அவர் மறைமுகமாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசப்படுகிறது.