இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை
தொடங்கி வைத்தார். இதனையடுத்து தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “நல்லது செய்வதையும் பண்பறிந்து வெகு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அதேநேரத்தில் நல்லது செய்தால்
மட்டும் போதாது, அதை சரியாக, சரியான மக்களுக்கு செய்ய வேண்டும். நல்லதை சரியாக செய்தால் தான் அது அரசியல். அந்த
வகையில் தானத்தை தவறான ஆட்களிடம் கொடுப்பது கூட ஒரு தவறுதான்.
நான் அரசியல் பொறுப்புக்கு வந்தால், என்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம். தற்போது நியாயத்திற்காக குரல்
எழுப்பும் செயலி ஒன்றை அறிமுகம் செய்கிறேன். அதற்கு “மையம் விசில்” என்று பெயரிட்டுள்ளேன்.
பிரச்சினைகளுக்கு எதிராக குரலை வலுப்படுத்துவதற்கு காலம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். இந்த செயலி மூலமாக மக்கள்
தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கலாம்.
தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதடைந்துள்ளது. பழுதை சரிசெய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும். மக்கள்
பிரச்சனைகள் குறித்து அறிய விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.
நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்று இன்னமும் என்னை கேட்காதீர்கள். நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்.
அரசியல் பயணத்திற்கு நிறைய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அஸ்திவாரத்தை வலுவாக அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக கட்சியின் பெயரை இப்போதே அறிவிக்க வேண்டும் என்ற அவசரமும், அவசியமும் இல்லை.
திரைப்படம் உருவாக்க 6 மாத காலம் எடுத்து கொள்பவன் நான். அரசியல் என்பது மிகப்பெரிய பணி.
விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். இதன் மூலம் பலதரப்பட்ட மக்களையும், அவர்களது
பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், நேர்மையற்றவர்களாக இருந்தால் கடுமையாகத் தண்டிப்பேன்.
இந்துக்களை புண்படுத்துவது எனது நோக்கமல்ல. வன்முறையை எந்த மதத்தினரும் கையில் எடுக்கக் கூடாது என்பதே
விருப்பம். அனைத்து சமூகத்திலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். நான் பிறந்த குலத்திலிருந்து விலகியவன் நான். என்னை
இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்று பேசினார்.