full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

”நாட்டில் புரட்சி தொடங்கி இருப்பதாக நினைக்கிறேன்”: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விட்டதாகவும், கோட்டை நோக்கிய பயணம் தொடங்கி விட்டது என்றும் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தனியார் டெலிவிஷன் ஒன்றில் ‘பிக்பாஸ்’ என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோதும் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சக்தி, கமல்ஹாசனிடம் “என்னைப்பார்த்து நீங்கள் அரசியலில் ஈடுபடலாம் என்று கூறியது கேலி செய்வதுபோல் இருந்ததாக பலரும் பேசினார்கள்” என்று சொல்லி வருத்தப்பட்டார்.

இதற்கு கமல்ஹாசன், “இப்போது இருக்கிற அரசியல்வாதிகள் தங்களை கேலி செய்யும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள். அதனால்தான் நான் அப்படி சொன்னேன். இப்போது கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அந்த கேலியை இனிமேல் நான் செய்யமுடியாது. நான் இனிமேல் முகமூடி போட்டுக்கொண்டு இருப்பதாக இல்லை. யார் எப்படி இருந்தாலும்.” என்றார்.

மேலும் “நாட்டில் புரட்சி தொடங்கி இருப்பதாக நான் நினைக்கிறேன். ‘நீட்’ தேர்வு பற்றித்தான் நான் பேசுகிறேன். ‘நீட்’ தேர்வு மீது கோபப்பட்டு சபித்து, இதற்கு யார் காரணம்? யார் மீது குற்றம்? என்றெல்லாம் தேடிப்பிடித்து பேசுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களும் மாணவர்களும் தீர்வை நோக்கித்தான் செல்ல வேண்டும்.

ஒரு பிள்ளை செத்துப்போய் விட்டது. இனி ஒரு பிள்ளை சாகக்கூடாது. அப்படி நடப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியாது. பல முறை நம் இனத்துக்கு துரோகங்கள் இழைக்கப்பட்ட போதெல்லாம் அதை பார்த்தும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்று இருக்கிறோம்.

இனிமேல் அப்படி இருக்க முடியாது. கைகளை கோர்த்துக்கொள்ள வேண்டும். கற்று தேர்ந்த கல்வியாளர்கள் வாருங்கள். கைகோர்த்துக் கொள்வோம். என் வாழ்க்கையும் அறிவும் முன்னேறியது என்றால் அதற்கு காரணம் கற்றவர்களுடன் கைகோர்த்துக்கொண்டதால்தான். மீண்டும் அதைச்செய்ய ஆசைப்படுகிறேன்.

மாணவர்கள், அடுத்த தலைமுறையினரை பெரியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று விட்டு விடாதீர்கள். நாளைய பெரியவர்கள் நீங்கள்தான். நாளைக்கு மூத்த தலைவர்களாக இருந்து அடுத்த தலைமுறைக்கு உதவப்போவதும் நீங்கள்தான். இப்போதே பயிற்சியை ஆரம்பியுங்கள். போராட்டம் நடத்தி விட்டோம். குரல் கொடுத்து விட்டோம் என்று நினைக்காமல் தீர்வை நோக்கிச் செல்லுங்கள்.

 

அடுத்த வருடத்துக்குள் இந்த பிரச்சினையை தீர்த்தாக வேண்டும். அடுத்த தலைமுறைக்காக காத்துக்கொண்டு இருக்க முடியாது. அடுத்த வருடத்துக்குள் இதற்கான தீர்வை நாம் கண்டு பிடித்தே ஆக வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் செய்வோம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். நான் தோள் கொடுக்கிறேன்.

நான் பெரிய ‘அட்லஸ்’ இல்லை. உலகை தாங்கிப்பிடிப்பதற்கு. ஆனால் உலகம் என்னை தாங்கிப்பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படி தாங்கிப்பிடித்ததால்தான் நிமிர்ந்து நிற்கிறேன், ஒரு கலைஞனாக இப்போதும். ஒரு குடிமகனாக நானும் நீங்களும் தலைநிமிர வேண்டும் என்றால் நாம் ஒன்றுபட வேண்டும்.

கட்சி, சாதி, மத, பேதங்களைக் கடந்து நாம் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டே ஆக வேண்டும். என்ன பெரிய சுதந்திர போராட்டமா? என்றால் ஆம், இது அதுதான். காற்று வாங்க கிடைத்த சுதந்திரத்தை எல்லாம் சுதந்திரம் என்று நம்பி நாம் பெருமிதம் கொள்ளக் கூடாது. அதையும் கடந்து செல்ல வேண்டும்.

என்னுடைய கனவுகள், உங்களுடையை கனவுகள் எல்லாம் ஒன்றுதான். அந்த கனவை கலைப்பதற்கு நிறைய சுயநலவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முடிந்தால் புத்தி சொல்வோம். இல்லையென்றால் அவர்களை நகர்த்தி வைப்போம்.” என்று பேசினார்.