தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று தொடங்கியது. இதற்காக திருவேற்காடு சாலையில் உள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் வணிகர்கள் முன்னிலையில் பேசியதாவது,
நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள். அவர்களது உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. தேவையின்றி வணிகர்கள் கடையடைப்பு செய்யமாட்டோம் என்ற அறிவித்திருப்பது வரவேற்புக்கு உரியது. மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டங்கள் நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாகும். கிராமசபைக் கூட்டத்தில் வணிகர்கள் அனைவரும் பெருமையுடன் பங்கேற்க வேண்டும்.
கிராமசபை என்பது நான் கண்டுபிடித்தது அல்ல; தங்களுக்கு நினைவுபடுத்தியது மட்டுமே. ஆண்டுக்கு 4 நாட்களாவது கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்பது அவசியம். நான் அரசியலுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனது. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்திற்கு எதிராக சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போதே நான் அரசியலுக்கு வந்து விட்டேன். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறையுடன் வணிகத் துறையும் இணைய வேண்டும்.
மடைமாற்றம் செய்யவும், தமிழக அரசியல் இழந்த மாண்பை மீட்கவுமே நாங்கள் வந்துள்ளோம்.
தமிழகம் செலுத்தும் வரியில் வடமாநில விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. தமிழகத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்வதை நினைவுபடுத்தவே இங்கு வந்தேன்.” என்றார்.