நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் குறித்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகியிருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்களும், பாஜகவினரும் கடும் எதிர்வினை ஆற்றியிருந்தனர.
இந்நிலையில், நேற்று அவர் டிவிட்டரில் எழுதியிருந்த கவிதையில் ‘முடிவெடுத்தால் யாமே முதல்வர்’ என்று சொல்லியிருந்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவையிட்டிருக்கிறார் கமல். அதில், “ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், அதற்கு சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசியம் கல்லுளிமங்கருக்கு போன்ற ஊழலாற்கே உரித்தான குணாதிசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதுகெலும்பு இல்லாதவர் கமலை விமர்சித்த எச்.ராஜாவை – எலும்பு வல்லுநர் ராஜா என்றும் , அரசியலுக்கு வரத் தயாரா என்ற அமைச்சர் ஜெயக்குமாரை ‘தம்பி ஜெயக்குமார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ’நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்குமொழியில் அள்ளிவீசுபவர்கள்… ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்,… என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது” என்றும் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரிவிலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல வெகுசிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர்.” என்று சினிமா துறையில் ஊழல் நடப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும் என்றும் கமல் தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ’மக்கள் மந்தைகள் அல்லர். மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கும் கமல், புகார்களை அனுப்ப அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கமலுக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் இடையே நடந்து வரும் வார்த்தைப் போர் கமலஹாசனின் இந்த பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு காரணமாக உச்சத்தை அடைந்துள்ளது.