நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான நேற்று மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். அதன்பின்னர், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசன் குடும்பத்தினருடன், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “மாநில, தேசிய-ஆசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் எங்கள் சிவாஜி. ஒருவேளை நான் சினிமாவுக்கு நடிக்க வரவில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ரசிகனாக வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஆக இந்த விழாவுக்கு எப்படியும் நான் வந்திருப்பேன். யார் தடுத்தாலும் வந்திருப்பேன்.
அரசியல் எல்லை, தேசிய-ஆசிய எல்லையெல்லாம் கடந்த இந்த நடிகருக்கு அரசு சொல்லும் நன்றி அறிவிப்பு என்று தான் நான் கருதுகிறேன். நம் வாழ்க்கையை மேம்படுத்திய அவரது கலைக்கு நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் நன்றி அறிவிப்பு இது.
பிரபு பேசும்போது எத்தனை முதல்வர்கள் மரியாதை செய்வதற்கு முன் வந்தார்கள் என்பதை பெயர் பட்டியலிட்டு குறிப்பிட்டார். நான் அடுத்த கட்டத்துக்கு போகிறேன். எத்தனை அரசுகள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தாக வேண்டும். மதிப்பார்கள் என்பது உறுதி.
அதற்கு யாரையும் நாம் வற்புறுத்தியோ, கிள்ளியோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னால் நடக்கும். தமிழர்கள் நன்றி மறவாதவர்கள். எப்போதும் இந்த கலைஞனை நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர் அடியொற்றி தவழ்ந்த குழந்தைகளில் நானும் ஒருவன்.
பிறகு அதே நடையில் நடக்க வேண்டும் என்று முயன்று தடுமாறிய பல்லாயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன். அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாக மட்டுமே இங்கு எனது தன்நிலை மறந்து, என்நிலை மறந்து நான் ஒரு கலை ரசிகன் என்கிற முறையில் வந்திருக்கிறேன்.
எத்தனையோ நடிகர்கள் பேசிப்பேசி பார்த்து தோற்றவர்கள். பேசித் தோற்றவர்கள் என்று சொல்லும் போதெல்லாம் என்னைச் சொல்வது போலவே எனக்கு தோன்றும். இன்றும் முயன்று கொண்டிருக்கிறோம். அதுபோல் நடிக்க வேண்டும் என்று, அதுதான் எங்கள் நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நடிகர் திலகத்துக்கு நன்றி சொல்ல இங்கு வந்திருக்கிறேன். அதற்கு அனுமதி அளித்த கலை உலகிற்கும், அரசிற்கும், அரசியலுக்கும் நன்றி.” என்றார்.