வருகிற 10-ந்தேதி அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர்ட் பல்கலைக் கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் ‘தமிழகம்’ என்ற தலைப்பில் பேச இருக்கிறார்.
இதில் தமிழகம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை எடுத்து கூறுகிறார். இதற்காக கமல்ஹாசன் இன்று அதிகாலை 1.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “மத்திய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாகவே தமிழகம் புறக்கணிக்கப்படுவது சோகம் என்றாலும் இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பக்கம் சற்றே கடைக்கண் பார்வை திரும்பி இருக்கிறது. கிராமத்தின் பக்கமும் பார்வை திரும்பி இருக்கிறது. இது இதமாக உள்ளது. நடுத்தர வர்க்கத்தை பொறுத்தவரை பாராமுகமாக இருந்திருக்கிறார்கள். இன்னும் அறிஞர்களிடம் கலந்து பேசி பட்ஜெட் பற்றிய எனது கருத்துக்களை தெளிவாக தெரிவிப்பேன்.” என்றார்.
சமீபத்தில் வேலை நிறுத்தம் செய்த போக்குவரத்து தொழிலாளர்களின் 7 நாள் சம்பளத்தை தமிழக அரசு பிடித்தம் செய்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, “அது முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்று பதில் அளித்தார்.