full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

நமக்கு விரோதிகள் சமூகத்திற்கும் விரோதிகள் தான் : கமல்

நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி தனிக் கட்சி தொடங்கி அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். ராமேசுவரத்தில் உள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறார்.

இதற்காக ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார். கொடி, சின்னத்தையும் வெளியிடுகிறார். தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார்.

அதன்பிறகு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். நகரம், கிராமம் என்று திறந்த வேனில் தெருதெருவாக சென்று பொதுமக்களையும் ரசிகர்களையும் சந்திக்கிறார். முக்கிய பகுதிகளில் மேடைகளில் ஏறி பேசுகிறார். சுற்றுப்பயணத்தில் கட்சியின் கொள்கை திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்கிறார்.

சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க சென்னையில் ரசிகர்களை கமல்ஹாசன் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர், “ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும், தற்போது அதன் இலக்கு மாறியுள்ளது. இந்த பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல, மக்களை நோக்கி செல்வது. மக்களை நோக்கிய இந்த பயணம் தொடங்கி 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த பயணம் விரைவாகவும் நல்லபடியாகவும் இருந்தாக வேண்டும்.

சாதி என்ன, மதம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது கிடையாது, இனியும் அப்படித்தான் இருக்கும். இனி நீங்கள் எந்த கட்சி என கேட்டு உறுதி செய்து கொள்வோம். சாதி, மதங்களை கடந்த பயணமாக இது இருக்கும். வெற்றியை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

மக்களை நோக்கிய பயணம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறுகிறேன். ரசிகர்கள் பிதற்றலான சுவரொட்டிகள் எதுவும் ஒட்ட வேண்டாம், கண்ணியம் காக்கப்பட வேண்டும். நாம் யாரையும் தேவையில்லாமல் சாட வேண்டாம், நானும் திருத்திக்கொள்வேன். நமக்கு விரோதிகள் என்பவர்கள் சமூகத்திற்கும் விரோதிகள்தான்.” என்றார்.