நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னை எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு சென்று அங்கு கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் பகுதியை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, அனல் மின் நிலைய சாம்பல் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் வட சென்னைக்கு மழையால் வெள்ளம் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளும், வெள்ளப்பகுதிகளுக்கு சென்று பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
காவல்துறை அதிகாரிகள் வெள்ளத்தில் இறங்கி உதவி செய்யும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “காவல் பணியுடன், நிவாரண மீட்பு பணியிலும் ஈடுபடும் காவல் துறையினருக்கு நன்றி. நல்ல குடிமகன் சீருடை அணிந்தாலும், அணியாவிட்டாலும் பிரகாசிப்பார்.” என்று பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
மேலும், “இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவி செய்யுங்கள். அரசு பணியாளர்களுக்கு இடைஞ்சலோ, கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்துக்கு பாவம் இல்லை.” என்று கூறியுள்ளார்.