கனா விமர்சனம் 3.5/5
ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கனா’.
படத்தின் கதைப்படி….
முருகேசன் (சத்யராஜ்) தனது கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயி. இவருக்கு ஒரே மகள் கெளசல்யா முருகேசன்(ஐஸ்வர்யா ராஜேஷ்). கிரிக்கெட்டில அதிக ஆர்வம் கொண்டவர்.
தனது தந்தையை போல் மகளுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுகிறது. சிறு வயதில் இருந்தே அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் உதவியுடன் கிரிக்கெட் கற்று வருகிறார்.
கெளசல்யாவின் அம்மாவிற்கு கிரிக்கெட்டில் துளிகூட விருப்பமில்லை என்றாலும், தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி சாதித்து வருகிறார்.
தண்ணீர் இல்லாமல் விவசாயம் பேரழிவை சந்திக்கிறது. விவசாய கடன் கட்டமுடியாமல் தான் வாழ்ந்து வரும் வீட்டை ஜப்தி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார் முருகேசன்.
இந்திய அணிக்கு தேர்வாகும் ஐஸ்வர்யா ராஜேஷ், பல இன்னல்களை சந்திக்கிறார். தனது கனவு கலையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
தந்தையும் மகளும் அப்படிப்பட்ட இக்கடான சூழ்நிலையில் இருவரும் எடுக்கும் முடிவே இந்த ‘கனா’….
காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை படத்திற்கு பிறகு தனக்கான முத்திரையை செவ்வென செதுக்கி பதித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கீறார். பிடிவாதம், துக்கம், ஏக்கம், கவலை, விடா முயற்சி, என அனைத்தையும் ஒரு சேர முக பாவனையில் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. பல நடிகைகள் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு கதாபாத்திரத்தை எடுத்ததற்காகவே ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஒரு மிகப்பெரிய பூங்கொத்தை கொடுக்கலாம்.
முருகேசனாக சத்யராஜ் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடித்திருக்கிறார் என்று கூட கூற முடியாது வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். எவ்வளவு பெரிய இழப்பு வந்தும் தன்னுடைய விவசாய நிலத்தை மட்டும் விற்று விடாமல் தொடர்ந்து விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஒரு விவசாயியாக அவர் படும் இன்னல்கள் ஒரு விவசாயியாக உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிகிறது. (கனத்த இதயத்தோடு)
உடன் வரும், இளவரசு, தர்ஷன், ரமா, முனிஷ்காந்த், நமோ நாராயணன், சவரி முத்து, அந்தோனி பாக்கியராஜ் அனைவரும் கதைக்கேற்ற கதாபாத்திரங்கள்.
இதில், சிறப்பு தோற்றத்தில் வரும் சிவகார்த்திகேயன், வாழ்க்கையில் வெற்றிக்கு தேவையான ஒரு சில வீர வசனங்கள் அவர் பேசும்போது அப்ளாஷ்..
படத்தில் வீசப்படும் ஒவ்வொரு வசனமும் விவசாயத்தை பற்றியோ விவசாயியை பற்றியோ நினைக்காத ஒவ்வொருவருக்கும் விழும் சவுக்கடி…
“விளையாட்டை சீரியஸா பாக்க தெரிஞ்ச நமக்கு, விவசாயத்த விளையாட்டா கூட பார்க்க தெரியல’,
‘ஜெயிச்சவங்க சொல்றததான் இந்த நாடு கேட்கும், நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு வந்து பேசு’ , போன்ற வசனங்கள் படத்தின் ஓட்டத்திற்கு மிகப்பெரிய பலம்.
படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அருண்ராஜா காம்ராஜ்ஜின் மெனக்கெடல், பல வருட உழைப்பு கண்முன்னே வந்து செல்கிறது. காட்சியமைப்பிலும் தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
திபு நினன் தாமஸ் இசையில் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் ரிபீட் மோட்… பின்னனி இசை – பலம்.
சரியான இடத்தில் கத்தியை நீட்டிருக்கிறார் எடிட்டர் ரூபன்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு க்ளைமாக்ஸில் வரும் இறுதி போட்டிக்கு விறுவிறுப்பேற்றிருக்கிறது.
விவசாயத்தை போற்றி இலட்சியத்தை ஏற்றியும் ‘கனா’வின் கொடி உயரம் தொடுகிறது…
பல கெளசல்யா முருகேசனுக்கு ஒரு தூண்டு கோல் இந்த ‘கனா’.
கனா – கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்..