சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா நடிக்க உருவாகியுள்ளது’கண்ணே கலைமானே’.
கதைப்படி,
மதுரையில் சோழவந்தான் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் பட்டதாரி வாலிபரான உதயநிதி. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார். விவசாயத்தை போற்றும் அப்பா(பூ ராம்), பேரன் மீது உயிரையே வைத்துள்ள பாட்டி(வடிவுக்கரசி), நண்பர்கள் என சந்தோஷமான வாழ்க்கை தான் உதயநிதியோடது.
பணியிடை மாறுதலாக மதுரை பகுதியின் வங்கி அதிகாரியாக வருகிறார் தமன்னா.. பார்வையிழந்த அம்மா , ஒரு தம்பி என தமன்னாவும் அமைதியான ஒரு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.
உதயநிதியின் விவசாய சேவையை பார்த்து, தமன்னாவுக்கும் உதயநிதி மேல் காதல் வர, உதயநிதிக்கும் தமன்னா மீது காதல் வருகிறது. பெற்றோர்களின் சம்மதத்தோடு இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.
திருமணம் முடிந்த சில தினங்களுக்குப் பிறகு, தமன்னாவின் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட, தனது பார்வையை அவர் இழந்து விடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
கமலக்கண்ணன் என்ற கதபாத்திரத்தில் நடித்துள்ள உதயநிதி, நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஹீரோவுக்கான கதைக்களமாக இது இல்லாமல், கதைக்கான ஹீரோவாக இருந்து தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளார் உதயநிதி. நல்ல விவசாயியாக வருவதில் ஆரம்பித்து, அப்பாவுக்கு நல்ல மகனாக, தன் பாட்டியை மதிப்பது, தமன்னாவுக்கு நல்ல கனவனாக இருந்த வரையிலும் அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் உதயநிதி. இது போன்ற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் இவருக்கென்ற ஒரு முத்திரை நிச்சயம் உருவாகும்.

தனது அனுபவ நடிப்பால அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டார் வடிவுக்கரசி. தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கண்களிலும் ஈரத்தை வர வைத்து விடுகிறார்.
பூ ராமும் தனது அனுபவ நடிப்பை காட்டியுள்ளார். வசுந்த்ரா, சரவண சக்தி, தீப்பெட்டி கணேசன், அம்பானி ஷங்கர், வெற்றி என அனைவரும் தங்களது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒளிப்பதிவு யார்..?? என்று அனைவராலும் கேட்கப்பட்டு பாராட்டுப்பட்டுவிட்டார் ஜலேந்தர் வாசன். தனது முதல் படம் என்பது கூட தெரியாத அளவிற்கு கச்சிதமான ஒளிப்பதிவு.
கதைக்களத்தில் இன்னும் சற்று சுவாரஸ்யத்தை கூட்டினால், இன்னும் மெருகேறியிருக்கும்.
கண்ணே கலைமானே – குடும்பத்தோடு ஒருமுறை பார்க்க வேண்டிய அழகிய சோலை…