‘பாகுபலி’ முதல் பாகத்தில் கொஞ்சம் ஏமாற்றினாலும், இரண்டாம் பாகத்தில் அழகு பதுமை, சண்டைக் காட்சி, வீர வசனங்கள் என தனது ‘தேவசேனா’ கதாபாத்திரத்தை முழுமையாக செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா. இந்த கதாபாத்திரம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இந்த கதாபாத்திரத்தை செதுக்கியிருந்தார் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்.
இந்நிலையில், இந்தியில் தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்கு கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத், அந்த தொடரில் வரும் கதாநாயகிக்கு தேவசேனா என்று பெயர் வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் நடிக்கவுள்ளார்.
‘ஆரம்ப்’ என்ற அந்த தொடர் புராணக் கதையாக உருவாகவிருக்கிறது. இந்த தொடரில் வரும் தேவசேனா கதாபாத்திரம் திராவிட பாரம்பரியத்தில் வந்த வீரமங்கை இளவரசியாக உருவாக்கப்பட்டுள்ளதாம். ‘கோ’, ‘புறம்போக்கு’ என்று சில வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துவிட்டு, வாய்ப்பில்லாமல் இருக்கும் கார்த்திகாவுக்கு இந்த தொடர் கைகொடுக்கும் என நம்பலாம்.