full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பிரபல கார்டூனிஸ்ட் பாலா கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கந்துவட்டி கொடுமையால், குழந்தைகளுடன் ஒரு இளம் தம்பதி தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கேலிச்சித்திரம் வரைந்த சென்னையைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் பாலா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் முதல்வரின் படங்களை கொண்ட அந்த கேலி சித்திரம் தம்மை அவதூறு செய்வது போல உள்ளதாக திருநெல்வேலி ஆட்சியர் சந்தீப்நந்தூரி அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

லைன்ஸ் மீடியா என்ற பெயரில் இணையதளம் நடத்தி வருகிறார் பாலா. கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் தீயிட்டு கொளுத்திக் கொண்டதைக் கண்டித்து கட்டுரை மற்றும் கேலிச்சித்திரத்தை அந்த தளத்தில் பதிவிட்டிருந்தார். 

கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்துள்ளதாக திருநெல்வேலி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 501ன் கீழ் பாலா கைது செய்யபட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 

”மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரைக் கொண்டு பாலாவை சென்னையில் கைது செய்துள்ளோம். விசாரணை நடந்துவருகிறது. திருநெல்வேலிக்கு பாலா கொண்டுவரப்படுவார்” என்று அவர் தெரிவித்தார்.