ரேனிகுண்டா இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் கருப்பன்.
காளைகளை அடக்குவதில் வல்லவரான விஜய்சேதுபதி, காட்டு வேலைக்கு போவது, சம்பாத்தித்த பணத்தில் தாய்மாமன் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றுவது என இருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது.
யாராலும் அடக்க முடியாத அந்த காளையை அடக்கினால், தனது தங்கையான நாயகி தன்யாவை திருமணம் செய்து தருவதாக விஜய் சேதுபதியிடம் சவால் விடுகிறார் பசுபதி.
அந்த காளையை அடக்கி விடும் விஜய் சேதுபதி, தன்யாவைத் திருமணம் செய்து கொள்கிறார். தன்யாவை ஒரு தலையாக காதலித்து வரும் பாபி சிம்ஹா, விஜய் சேதுபதியைக் கொன்று தன்யாவை அடைய திட்டம் தீட்டுகிறார். அதே நேரத்தில் விஜய் சேதுபதிக்கு உள்ளூர் பிரமுகர் சரத் லோகித்துடனும் பகை ஏற்படுகிறது.
தன்யா உடனான விஜய்சேதுபதியின் வாழ்க்கை என்ன ஆனது? பாபி சிம்ஹாவின் திட்டம் நிறைவேறியதா? சரத் லோகித்தின் பகைக்கு பலியானாரா? என்பதே படத்தின் கதை.
வசனங்கள், உடல் மொழி, முக பாவனைகள், சண்டைக் காட்சிகள், காளை அடக்கும் காட்சிகள் என அனைத்திலும் தனது யதார்த்தமான நடிப்பால் பட்டைய கிளப்புகிறார் விஜய் சேதுபதி.
தன்யா, கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். தன்யா மீது ஆசைப்படுவது, அதற்காக பழிவாங்குவது என வில்லத்தனம் காட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்துள்ள பசுபதி, வழக்கம் போல தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சிங்கம் புலி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். தன்யாவிடம் கண்கலங்கிப் பேசும் காட்சியில் மனதில் நிற்கிறார்.
அண்ணன், தங்கை பாசம், தாய், மகன் பாசம், கணவன், மனைவி காதல், ஜல்லிக்கட்டு, மிரட்டலான சண்டைக்காட்சிகள் என கலந்து கட்டி ஜனரஞ்சகமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். முதல் பாதி காதல் காட்சிகளும், சிங்கம் புலியின் காமெடிகளும் சலிப்படைய வைக்கின்றன. ஆனாலும் அத்தனைக் காட்சிகளிலும் விஜய் சேதுபதியின் நடிப்புக்காக மட்டுமே ஆடியன்ஸ் அமர்ந்திருக்கிறார்கள்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கருப்பன்’ – அன்பால் அடக்குகிறான்.