full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :

எல்லா மனுசனும் ஒண்ணு இல்ல – கருப்பி உடைக்கும் உண்மை!

ஒரு பாடல் வெளியான தினத்திலிருந்து மண்டைக்குள்ளும், மனதிற்குள்ளும் கிடந்து அனத்திக் கொண்டே இருந்தால் அதை என்னவென்று சொல்வது?. அது ஒரு கொண்டாட்டமாக இருந்திருந்தால் அனுபவிக்கலாம், குதூகலிக்கலாம். அது ஒரு அழுகுரலாக அல்லவா கேட்கிறது! ஒப்பாரியாக அல்லவா ஒலிக்கிறது!

பெற்ற பிள்ளையின் இறப்பை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் ஒரு தாயின் வலியாக, காதலியின் இழப்பினைத் தாங்க முடியாமல் தவிக்கும் ஒரு காதலனின் கதறலாக இதயத்தின் அடி நரம்பை அசைக்கும் இந்தப் பாடலை எவ்வாறு சாதாரணமாகக் கடந்து போக முடியும்?

ஏன்? தமிழ் சினிமாவில் இல்லாத பாடலா? அப்படி என்ன இருக்கிறது இதற்குள்?

“எல்லா மனுசனும் ஒண்ணு இல்ல” என்பது இந்தப் பாடலில் இருக்கிற ஒரு வரி, இதனைப் புரிந்து கொள்ளவும், அதை துணிந்து சொல்லவும் இந்த சமூகத்தின் மீதான புரிதல் என்பது மிக அவசியமாய் இருக்கிறது. அந்தப் புரிதல் கொண்டவர்களால் மட்டுமே “எல்லா வலியும் ஒண்ணு இல்ல” என்பதையும் இந்த சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.

காலம் காலமாக தொண்டைக் குழிக்குள் அடக்கி வைத்திருந்த ஒரு அழுகையை, கோபத்தை எதிர் கொள்வதும், தேற்றி ஆசுவாசப்படுத்துவதும் ஆகிற காரியமில்லை. சேர்ந்து அழுவதைத் தவிர, கோபம் கொள்வதைத் தவிர வேறு வழியுமில்லை.

“உன்னக் கொல்லும் போது அவன் சிரிச்சானா?, நீ குரைக்கும் போது அவன் முறைச்சானா?” என்கிற இடத்தில், “கருப்பி” என்றில்லாமல் வேறு எந்த உயிரையும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். கருப்பியின் இடத்தில் ஆணவக் கொலையாக்கப்பட்ட எத்தனையோ காதல் இணைகளை நாம் எண்ணிப் பார்த்துக் கொள்ள முடியும். ஆதிக்கத்தின் அட்டூழியத்தில் அழிந்து போன எண்ணற்றோரை நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். அதிகாரத்தின் வன்மத்தில் மாண்டு போன ஏராளமானோரை நாம் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

சக உயிரினிடத்தில் அன்பு செய்ய முடியாத, சமத்துவம் பேண முடியாத ஒவ்வொருவரைப் பார்த்தும் ஆக்ரோஷமான கேள்விகளை முன் வைத்துப் போகிறது இப்பாடலின் ஒவ்வொரு வரிகளுமே. இந்த சமயத்தில், இந்த நொடியில் உள்ளுக்குள் ஒரு எண்ணம் பிறப்பினைக் கொண்டோ, நிறத்தினைக் கொண்டோ, மொழியினைக் கொண்டோ மற்றவரிடத்தில் இருந்து நம்மை வேறுபடுத்தி வைத்திருக்கக் கூடும். நம்மால் அந்த எண்ணங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள முடியுமெனில், “கருப்பியின் நாக்கினால் நக்கி நம் பாவங்களை கழுவிக் கொள்ளலாம்” தாராளமாக.

“நம்மலக் கொன்னவன் யாருன்னு எனக்கு நல்லாத் தெரியும்.. ஆனா செத்தது யாருன்னு அவனுக்கு மட்டும் தான் புரியும்” என்கிற வரிகள், நேசித்த உயிர்களை பலி கொடுத்துவிட்டு நடைபிணமாய் வாழ்கிற ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருந்தும் வெளிப்படுகிற வார்த்தைகளாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லாமல், இந்த பொது சமூகம் சுமந்திருக்கும் ஆயிரம் முகமூடிகளை, தன் கூரிய நகங்களின் முனையால் கிழித்தெறிந்து போகிறாள் இந்த “கருப்பி”.

இயக்குநர் மாரி செல்வராஜ், ராமின் வார்ப்பாக இருந்தாலும், பா.இரஞ்சித்தின் பிரதிபலிப்பாகவே தெரிகிறார். தனது குரல் எந்தத் தளத்தில் ஒலிக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கிற வேட்கையை ஒரேயொரு பாடலின் மூலம் எல்லோருக்கும் புரிய வைத்திருக்கிறார். அந்தத் தெளிவான நோக்கம் தான் அவர் மீதான நம்பிக்கையையும், “பரியேறும் பெருமாள்” படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் நமக்குள் விதைத்திருக்கிறது.