full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள காட்டேரி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய்,ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 
 
‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார் .
 
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்  K.E.ஞானவேல்ராஜா, இயக்குனர் டீகே, வைபவ்  சோனம் பஜ்வா, பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் படக்குழுவினர்  ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இந்த நிகழ்வில்  கலந்துகொண்ட நடிகர்கள் அனைவரும் படத்தில் தாங்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் உடையில் வந்து ஆச்சரியப்படுத்தினர்.
 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தபின் நடிகர் பொன்னம்பலம் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி  இதுதான்.. சொல்லப்போனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக்குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டாராம் பொன்னம்பலம். இந்த நிகழ்வில் பேசிய பொன்னம்பலம், “இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குனர் டீகே கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குனர் டீகேவுக்கு ‘டிராகுலா கிங்’ என்கிற பட்டத்தை வழங்குகிறேன்”  என கூறினார்.
 
நாயகன் வைபவ் பேசும்போது, “ஸ்டுடியோ கிரீன்  நிறுவனத்தில் ஒரு படம் நடித்துவிடவேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை நான்கு வருடமாக துரத்தி தூரத்தில் லவ் பண்ணினேன்..  பரிசாகத்தான் இந்த காட்டேரி வாய்ப்பு கிடைத்தது” என்றார்.
 
இயக்குனர் டீகே பேசும்போது, “யாமிருக்க பயமே ஹிட்டானாலும் அடுத்ததாக கவலை வேண்டாம் படம் சரியாக போகவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படம் இயக்கும் வாய்ப்பை தந்தார்.. இந்தப்படத்தின் டைட்டிலையும் அவர்தான் எனக்கு கொடுத்தார்.. அவர் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறன்” என்றார்.
 
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “நான்  பார்த்த வரையில் இயக்குனர் டீகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது..அடுத்து மீண்டும் ஹாரர் படமா என தயங்கிய அவரை நான் தான் வற்புறுத்தி இந்தப்படம் பண்ண வைத்தேன். காரணம் இது வழக்கமான பேய்ப்படம் இல்லை . டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன.. ‘காட்டேரி’ ரிலீஸுக்கு பிறகு அவர் மாஸ் இயக்குனராக மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார்.. அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன்.. அவரும் கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார்” என .பேசினார்.