த முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, கேத்ரின் தெரசா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கதாநாயகன்’.
அரசு அலுவலராக வேலைபார்க்கும் விஷ்ணு விஷால் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட பயப்படும் சுபாவம் கொண்டவர். இவருக்கு பக்கத்து வீட்டு கேத்ரின் தெரசா மீது காதல் வருகிறது. கேத்ரின் தெரசா மனதில் இடம் பிடிக்க தனது பால்ய கால நண்பரான சூரியின் உதவியை நாடுகிறார். அப்போது அவர்கள் எடுக்கும் முயற்சியின் போது, கேத்ரின் தெரசாவின் அப்பா ஒரு ஒரு லோக்கல் ரௌடியிடம் சிக்கிக் கொள்ள , அவரை காப்பாற்றாமல், தப்பித்து ஓடுகிறார்.
ஒரு கட்டத்தில் கேத்ரின் தெரசாவுக்கு காதலுக்கு சம்மதித்து விட, பெண் கேட்டு செல்லும் விஷ்ணு விஷாலிடம் , எந்த விதத்திலும், தைரியமில்லாத உனக்கு என் பெண்ணைக் கட்டித்தரமாட்டேன் என்று கூறி விடுகிறார் கேத்ரினின் அப்பா.
விஷ்ணு விஷால் பயத்திலிருந்து விடுபட்டாரா, காதலியை மணந்தாரா என்பது தான் மீதிக்கதை.
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றி கூட்டணி விஷ்ணு விஷாலுக்கு இந்த முறையும் கைகொடுத்திருக்கிறது. விஷ்ணு விஷால், பயந்தான்கொள்ளியாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
கேத்ரின் தெரசா தோன்றும் காட்சிகளில் எல்லாம் மனதை கொள்ளை கொள்கிறார். பரோட்டா சூரி தோன்றும் அறிமுக காட்சி முதல் அவர் அரங்கேற்றும் அலப்பறைகள் அரங்கம் அதிர செய்கின்றன.
டாக்டராக விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஓஷோவை பற்றி அவர் உரையாடும் காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.
காமெடி வில்லனாக ஆனந்தராஜ் அலட்டிக்கொள்ளாத நடிப்பால் மீண்டும் ஒருமுறை மக்களின் பாராட்டுகளை பெற்றுவிடுகிறார்.
ஆனந்தராஜிடம் சூரி வலிய போய் சிக்கி கொள்ளும் காட்சிகளும், மொட்டை ராஜேந்திரனின் இசை மழையும் நம்மை சிரிப்பு மழையில் நனைய வைக்கின்றன.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ஓகே. சீரான ஓட்டமில்லாமல், துண்டு, துண்டாக வரும் காட்சிகள் திரைக்கதையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எதையும் யோசிக்காமல், காட்சிகளில் நகைச்சுவையை மட்டும் படம் எதிர்பார்த்து பார்த்தால் ஓரளவுக்கு ஏமாற்றம் இருக்காது.
சினிமாவின் பார்வையில் ‘கதாநாயகன்’ – காமெடியன்.