இந்திப்பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவர் தற்போது இந்திய பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் ‘எஜுகேட் கேர்ள்’ என்ற அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பின் நிறுவனர் சபீனா இதுபற்றி கூறும்போது, “கத்ரீனா இந்த பொறுப்புக்கு தகுதியானவர். அவருக்கு சட்டம் நன்றாக தெரியும். பெண்கள் முன்னேற்றம் குறித்தும், பெண் கல்வி பற்றியும் உலக நாடுகளில் பேசி வருகிறார். அவர் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம் எங்கள் பணியை முன்பு இருந்ததை விட வேகமாக முன்னெடுத்து செல்வோம்” என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்த பொறுப்பை ஏற்றுள்ள கத்ரீனா கைப், “கிராமப்புறத்து பெண்களும், ஆதிவாசி பெண் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதிலும், உயர்கல்வி பெறுவதிலும் இன்னும் தடை உள்ளது. பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் நிற்கும் பெண்களை மீண்டும் அதில் சேர்த்து படிக்க வைப்பதற்கான பணியை இந்த அமைப்பு 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் தரமான கல்வியைப் பெற வேண்டும். இதற்கு உழைப்பதற்காகவே இந்த பணியில் என்னை நான் இணைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.