full screen background image
Search
Thursday 21 November 2024
  • :
  • :
Latest Update

கவண் – விமர்சனம்

விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியன் இருவரும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டு காதலித்து வருகின்றனர். படிப்பை முடிக்கும் தருவாயில் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்‌ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார்.

அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த் மற்றும் அவரது தோழி உள்ளிட்டோர் போஸ் வெங்கட்டுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குகின்றனர்.

இதனால் கோபமாகும் போஸ் வெங்கட் அந்த அமைப்பின் போராட்டத்தை தடுக்கும் விதமாக, தனது ஆட்களை விட்டு, விக்ராந்தின் தோழியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அந்த பெண்ணை பார்க்க செல்லும் மடோனாவிடம் விஜய் சேதுபதி அவளிடம் வீடியோ பேட்டி ஒன்றை எடுத்து வருகிறார்கள்.

இதயைடுத்து தான் பணிபுரியும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில், அந்த வீடியோவை வெளியிடுகின்றனர். இதையறிந்த போஸ் வெங்கட் அந்த தொலைக்காட்சியின் நிறுவனரான அக்‌ஷதீப் சய்கலை தொடர்பு கொண்டு இருவருக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் பேசி அந்த செய்தியை மாற்றி வெளியிடுகின்றனர்.

இதன்பின், விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு எதிரான கேள்விகளை கேட்கக் கூடாது என்றும், அவரது புகழ் பாடும் பேட்டியாக எடுக்க மேலிடம் உத்தரவு போடுகிறது. இந்நிலையில், அந்த பேட்டியை நேரிலையில் பார்த்த, விக்ராந்த், மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு கதற, ஏற்கனவே நிர்வாகத்தின் மீது கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி, கோபத்தின் உச்சத்திற்கு செல்ல போஸ் வெங்கட்டிடம் சரமாரியாக கேள்விகளை பொறிந்து தள்ளுகிறார்.

இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. இதனையடுத்து, தனது வேலையை உதறிதள்ளும் விஜய் சேதுபதி, எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் சந்திக்கும் டி.ராஜேந்தர் நடத்தி வரும் ஒரு சிறிய சேனலில் சேருகிறார். அந்த சேனல் மூலம் போஸ் வெங்கட், அக்‌ஷதீப் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இதையடுத்து அவர்களை, தனது கவண் மூலம் எப்படி வீழ்த்தினர்? என்பது கவணின் மீதிக்கதை.

வெகுநாட்களுக்கு பிறகு திரையில் காட்சியளித்துள்ள டி.ராஜேந்தர் தனக்கே உரிய பாணியில் கலக்கி இருக்கிறார். அவரது வசனங்களும், செய்கைகளும் பார்ப்பவர்களுக்கு உணர்ச்சியை தூண்டுவதுடன், ஆர்வத்தையும் கூட்டுகிறது. முதல்பாதியில் அவருக்கு குறைவான காட்சிகளே இருந்தாலும், இரண்டாவது பாதியில் திரையை கலக்கியதுடன் தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வெகுநாட்களுக்கு பிறகு திரையில் தோன்றினாலும், முந்தைய படங்களில் வருவது போல இப்படத்திலும் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது காட்சிகளுக்கு விசில் பறக்கிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். எப்போதும் போல அவருக்கே உரித்தான ஸ்டைலில், நடிப்பில் பாராட்டு பெறுகிறார். அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருக்கிறது. கல்லூரி மாணவர், தொலைக்காட்சி நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் என மிரட்டியிருக்கிறார். குறிப்பாக பத்திரிக்கை நிருபராக இவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது.

மீடியாவில் வேலை செய்யும் பெண்ணாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் மடோனா நடிப்பில் ஒருபடி மேல சென்றுள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு பேசுப்படியாக இருக்கிறது. விக்ராந்த் தனக்குரிய கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும்படியாக உள்ளது. மேலும் அவரது கோபமும், உணர்ச்சியும் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்படி உள்ளது. குறைவான நேரங்களில் வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நின்றிருக்கிறார்.

அயன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டியுள்ள அக்‌ஷதீப் சய்கல் இப்படத்திலும் மிரட்டி இருக்கிறார். தொலைக்காட்சி நிறுவனராகவும், வில்லனாகவும் வலம் வரும் அவருக்கு, அந்த வேடம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் போஸ் வெங்கட் அரசியல்வாதியாகவே வாழ்ந்திருக்கிறார். அரசியல் ரவுடியாக தனது மற்றொரு முகத்தை காட்டியிருப்பது காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது.

சில மீடியாக்களில் தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதேசமயம் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், உண்மைச் செய்திகளை கொடுத்து, அதே மீடியா மூலமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் என்பதையும், அதற்கு விடை காணமுடியும் என்பதையும் விளக்கியிருக்கும் கே.வி.ஆனந்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மேலும் வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் இருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. கோ படத்திற்கு பிறகு, அவருக்கே உரித்தான பாணியில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. அதற்காக கபிலன் வைரமுத்துக்கு ஒரு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். விக்ராந்த், டி.ஆர். வரும் காட்சிகளை உணர்ச்சிகரமாக அமைத்தது படத்திற்கு மேலும் பலம்.

தனக்குரிய தனித்துவமான இசையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் சரியான இடைவெளியில் அமைந்துள்ளது. குறிப்பாக “ஆக்ஸிஜன் தந்தாலே”, “ஹேப்பி ஹேப்பி நியூ இயர்” உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது.

திரையில் ரசிக்க வைக்கும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் அபிநந்தன் ராமானுஜத்தின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

சினிமாவின் பார்வையில் `கவண்’ சிறப்பு.