full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

*’டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘ஸ்டார்’. பி. ரூபக் பிரணவ் தேஜ் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வரும் இந்தத் திரைப்படத்தை ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பன்மொழி ரசிகர்களை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இளைய இசைஞானி’ யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவென யுவன் சங்கர் ராஜா இளைய தலைமுறையினரை கவரும் வகையில் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களும் இடம் பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களை பரவசப்படுத்தும் என படக் குழுவினர் உத்வேகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ‘ஸ்டார்’ படத்திலிருந்து பிரத்யேக காணொளி ஒன்று வெளியிடப்படவிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவர் இணையத்தில் வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இளம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்ற படைப்பை இன்னிசையுடன் வழங்கிய இயக்குநர் இளன் – யுவன் ஆகியோருடன் முதன்முறையாக நடிகர் கவினும் இணைந்து கூட்டணி அமைத்திருப்பதால், இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே மட்டுமல்லாமல் இசை ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.