கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

General News News
0
(0)

கவிஞர் வைரமுத்துவுக்கு
முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். கர்நாடக இசைப் பாடகியும் சமயச் சொற்பொழிவாளருமான விசாகா ஹரி பொற்கிழி பெறுகிறார்.

கவிஞர் வைரமுத்து வாழ்க்கைக் குறிப்பு:

பழைய மதுரை மாவட்டமாய் விளங்கிய இன்றைய தேனி மாவட்டத்தில் வைகை அணையை ஒட்டியுள்ள மெட்டூரில் 1953ஆம் ஆண்டு கவிஞர் வைரமுத்து பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர்; தாயார் அங்கம்மாள்.

உயர்நிலைப் பள்ளிப்படிப்பை வடுகபட்டியில் முடித்த வைரமுத்து சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ படித்துத் தங்கப்பதக்கம் பெற்றார். இவர் எழுதிய ‘வைகறை மேகங்கள்’ என்ற கவிதை நூல் இவர் கல்லூரியில் படிக்கும்போதே ஒரு மகளிர் கல்லூரிக்குப் பாடமாக விளங்கியது. கல்லூரிப் படிப்பை முடித்த கவிஞர் வைரமுத்து தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார்.

1980ஆம் ஆண்டு பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை 8000 பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து, இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.
திரைப்பாட்டு – இலக்கியம் என்று இரண்டு துறைகளிலும் சிகரம்தொட்ட வைரமுத்து தனது கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். அது 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் இவரைக் ‘காப்பியக் கவிஞர்’ என்று கொண்டாடினார். அந்நாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் ‘கவிசாம்ராட்’ என்று பாராட்டியிருக்கிறார். தமிழ்நாட்டின் அந்நாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இவருக்குக் ‘கவிப்பேரரசு’ என்று பட்டம் தந்திருக்கிறார்.

உலகின் 5 கண்டங்களிலும் தமிழ் இலக்கியப் பயணம் செய்தவர். அண்மையில் இவர் எழுதிய ‘மகாகவிதை’ என்னும் பெருங்கவிதை நூலுக்கு மலேசியன் இந்தியக் காங்கிரஸ் மற்றும் தமிழ்ப்பேராயம் இணைந்து ஒரு லட்சம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் 17லட்சம்) பரிசு வழங்கின.
இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து மூன்று பல்கலைக் கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவராவார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து 40க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இப்போது தமிழ் இசைச் சங்கம் முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டத்தை வழங்கியுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.