full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

நிஜமான அரசியல் பேசுகிறார் உமாதேவி. கவிதா முரளிதரன் பாராட்டு

அன்னை மீனாம்பாள் 25வது நினைவேந்தலில் மெட்ராஸ், கபாலி, மகளிர் மட்டும், அறம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல வெற்றி படங்களில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்-கவிஞர் உமாதேவிக்கு “எழுச்சி கவிஞர்” விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை மிக சிறப்பானவர் ஒருவரால் வழங்க வேண்டும் என விருதுக்குழுவினர் விரும்பினர். அதன் அடிப்படையில் ‘அறம்’ திரைப்படத்தில் நடித்த குட்டி நாயகி ‘தன்ஷிகா-மகாலக்ஷ்மி ‘ “எழுச்சி கவிஞர் ” விருதை உமாதேவிக்கு வழங்கினார். தலித் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை குழந்தைகள் இணைந்து ரூபாய் 25000 காசோலையையும் பரிசாக வழங்கினர்.

எழுச்சி கவிஞர் விருது பெற்றபின் ஏற்புரை நிகழ்த்தினார் கவிஞர் உமாதேவி,

“இந்த விருதை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் வாங்கிய பல விருதுகளை விட இந்த விருது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக எண்ணுகிறேன். என் குழந்தைகளும் என் சகோதரிகளாலும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழாவில் எனக்குக் கிடைத்த மீப்பெரும் அங்கீகாரம் இது. திரைத்துறையில் எனது பாடல்களுக்கு அடித்தளமிட்ட இயக்குனர் பா. இரஞ்சித்தில் தொடங்கி, மாயா அஸ்வின் சரவணன், மகளிர் மட்டும் பிரம்மா, அறம் கோபி நயினார் , தீரன் வினோத் உட்பட நான் பணியாற்றிய அத்தனை இயக்குனர்களுக்கும், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சந்தோஷ் தயாநிதி உள்ளிட்ட அத்தனை இசையமைப்பாளர்களுக்கும் தனது பேரன்பையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார். மேலும் அன்னை மீனாம்பாளின் நினைவு தினமான இன்று அறம் திரைப்பட குட்டி நாயகி தன்சிகா – மகாலக்ஷ்மியின் கரங்களால் விருது வழங்கி சிறப்பித்த பேராசிரியர் செம்மலருக்கு நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்”. என்றார்.

ஒட்டுமொத்த பெண்களின் சுயமரியாதை வாழ்வுக்காக போராடியவரும், புத்தரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் தனது ஆசானாக ஏற்றுக்கொண்டவருமான ஈ.வே.ரா.அவர்கள் ‘தந்தை பெரியார்’ என அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார் அன்னை மீனாம்பாள். எனவே தருமாம்பாள், நாராயணியம்மாள் இவர்களோடு ஆலோசித்து 1938 நவம்பர் 13 அன்று வடசென்னை யானைகவுனி சாலையில் உள்ள ஒத்தவாடை தெருவில் பிரமாண்டமான பெண்கள் மாநாட்டினை ஒருங்கிணைத்தார். இன்று செம்மலர் என்ற தனியொரு மனுஷி ஒருங்கிணைத்த அன்னை மீனாம்பாளின் 25 வது நினைவேந்தலில் நாமெல்லோரும் பங்கேற்பதைப்போன்று, நான் எழுச்சி கவிஞர் என்ற பெருமைக்குரிய விருது பெற்றதைப்போன்று அன்னை மீனாம்பாள் என்ற தனியொரு மனுஷி ஒருங்கிணைத்த பெண்கள் மாநாட்டில் மறைமலையடிகளாரின் மகள் நாராயணியம்மாள் தலைமையில் ஈ.வே.ராவிற்கு “தந்தை பெரியார்” என்று பட்டம் வழங்கப்பட்டது வரலாறு.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி புலமைப்பெற்ற பெண்ணியவாதியும் களப்பணியாளருமான அன்னை மீனாம்பாள் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, பல்கலைக்கழக செனட் உறுப்பினர், திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல உயர்பதவிகளை வகுத்து வந்தவர் என்பதை நாம் இன்றைய தலைமுறைக்கு அறிவுறுத்தவேண்டும்.

உலகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட பெண்ணின் முன்னேற்றத்திற்கும் பின்னால் சமூக விடுதலை சிந்தனையுள்ள ஆண்கள் இருக்க வேண்டும். இருந்து வருகின்றனர். எனது வெற்றிக்குப்பின்னாலும் பெண்விடுதலை சிந்தனையுள்ள என் அப்பா குப்பன் அவர்களைத் தொடர்ந்து நிறைய ஆளுமைகள் உள்ளனர். ஒளவைக்கு ஒரு அதியமான், அன்னை மீனாம்பாளுக்கு ஒரு சிவராஜ், அன்னை மாயாவதிக்கு ஒரு கன்சிராம், இந்த உமாதேவிக்கு ஒரு பாரதி பிரபு.

என் சமூகம் வழங்கிய இந்த மாபெரும் விருதிற்கு ஈடுசெய்ய எனது கடமை இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்விருதினை வழங்கிய பேரன்பின் உறவு செம்மலர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த அவரது துணைவர் தோழர் ஜெபராஜ், பாதர் ஜான் கிருஷ்டி, தீப்தி சுகுமார், மீனா சோமு ஆகியோருக்கும் என் மகிழ்வும் நன்றியும் பகிர்கிறேன்”, என்று தனது ஏற்புரையில் குறிப்பிட்டார் உமாதேவி.

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கவிதா முரளிதரன் ‘உமாதேவி பாடல்களில் உள்ள சமூக அரசியல் பார்வை’ என்பது பற்றி உரை நிகழ்த்தினார். அதில் ஒரு பகுதி,

“உமா, பாடலாசிரியராக வேண்டும் என்பதை விட உமாவைப் போல நுண்ணுணர்வும் அரசியல் தெளிவும் கொண்ட ஒரு கவிஞர் தமிழ் சினிமாவுக்கு தேவை என்று நான் நம்புகிறேன். அதனால் பெரிய மாற்றங்கள் உருவாகாது என்று நினைத்தவர்களுக்கு உமா இன்று அவரது பாடல் வரிகளால் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் இரஞ்சித் அரசியல் தெளிவு ஒரு பெண்ணிடமிருந்தால் அவர் எப்படி குடும்பத்தின் மீதும் குழந்தைகள் மீதும் தாக்கம் செலுத்துகிறார் என்றுசொல்லியிருந்தார். அரசியல் தெளிவிருக்கும் பெண்களிடமிருந்துதான் மாற்றம் உண்மையிலேயே தொடங்குகிறது. உமா அப்படியொரு மாற்றத்தைதான் திரையுலகில் நிகழ்த்திக் காட்டுகிறார். ரஜினிகாந்திற்காகவே எழுதப்பட்ட எத்தனையோ பாடல்களில் நான் மிக ரசிப்பது, ‘ வீரதுரந்தரா’ பாடலை. காரணம், அது பேசும் அரசியல். ஒரு காதல் பாடலிலும் பறையிசையின் அனலைப் பற்றி பேச முடிகிறது உமாதேவியால்.

“வாதாட ஊருக்கு சொல்லித் தந்தாளா
வேதத்த தூரத்தில் ஒத்தி வச்சாளா”

என்றொரு வரி ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் அடி வாடி திமிரா என்கிற பாடலில் வருகிறது. இது மாதிரியான ஒரு பாடலில் கூட வேறு எந்த பாடலாசிரியராவது இப்படியொரு வரியை வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.

“ஆணும் பெண்ணும் ஆட்டம் போட
அண்டம் இது ஆப்பிள் தோட்டம்
ஒண்ணுக்கொண்ணு அடிமைகள் இல்ல”

என்று சொல்லும் போது ஆண்-பெண் சமத்துவம் வேதத்தை தூரத்தில் வைத்தால் மட்டுமே சாத்தியம் என்று உமா உரத்து சொல்வதைப்போல் வேறு யாராலும் சொல்லிவிட முடியாது. அதனாலேயே உமா திரைப்பாடல்களில் பேசும் அரசியல் நிஜமான அரசியல் என்கிறேன். பெரும்பாலான திரைப்பாடல்கள் முன்னிறுத்தும் அரசியல் போல வெறும் கோஷங்கள் இல்லை இவர் பாடல்கள்” என்றார் கவிதா முரளிதரன்.

லயோலா கல்லூரி சமூகவியல் துறை பேராசிரியர் செம்மலர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்.