சென்னை, செப்டம்பர் – 11 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்சம், மூத்த ஓவிய கலைஞர் ராமு அவர்களுக்கு ரூ.50,000/- வழங்கப்பட்டது.

2020-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த மூன்று கல்வி ஆண்டுகளிலும் நிகழ்ந்த அசாதாரண சூழல் விளிம்பு நிலை மக்களின் கல்வி வாய்ப்பை இன்னும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. ஊரடங்கு நடைமுறைகளால் வேலைக்கு சென்று தினக்கூலி பெறமுடியாத குடும்பங்களுக்கு இணைய வழி கல்வி கூடுதல் சுமையை உருவாக்கியது. 40 ஆண்டுகளாக எங்கள் தந்தை தொடர்ந்து நடத்தி வந்த இந்த குடும்ப விழாவை கடத்த இரண்டு ஆண்டுகள் நடத்திட இயலவில்லை. இருப்பினும், களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது. அசாதாரண சூழலில் எளிய குடும்பங்கள் எதிர்கொண்ட சிரமங்களை சிறு அளவிலாவது குறைத்திடும் பணிகளை முன்னெடுத்திருந்தோம்.
1. பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள 10, 11 மற்றும் 12 வகுப்பு பயின்று வந்த அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்களை அடையாளம் கண்டு ரூ.10,000/- மதிப்புள்ள ‘ஸ்மார்ட் போன்’ டிசம்பர் 2020-இல் வழங்கினோம்.
2. தனியார் கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த, பொருளாதார இழப்பால் கல்வி கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.10,000/- தலா ஒருவர் என 4000 குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணங்களை அவர்கள் பயின்ற கல்வி நிறுவனத்திற்கு செலுத்தினோம்.
3. 2020, 2021, 2022 ஆண்டுகளில் முறையே 556, 658, 560 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பை ஒத்த கருத்துடைய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அகரம் விதைத் திட்டத்தின் வாயிலாக உருவாக்கினோம்.
ஊரடங்கு காலம், நோய் அச்சம் இயல்பு வாழ்வை புரட்டி போட்டிருந்த சூழலிலும் அகரம் தன்னார்வலர்கள் மேற்கண்ட பணிகளை தொடர்ந்திருந்தனர். அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் கடினமான, சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. இணைந்திருப்போம். என்று கூறினார்.