full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

”வாய்மையே வெல்லும்” லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கெஜ்ரிவால் கருத்து

டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும் அதிருப்தியை உருவாக்கியது. குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், கட்சித்தலைமையை வெளிப்படையாக விமர்சித்தார்.

அவரை தொடர்ந்து மேலும் பல தலைவர்கள் கட்சித்தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், குமார் விஸ்வாசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தவகையில் குமார் விஸ்வாசின் ஆதரவாளர் என கருதப்படும் நீர்வளத்துறை மந்திரி கபில் மிஸ்ராவின் மந்திரி பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி தலைவர்கள் சிலரின் ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன் என அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று அவர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவே ஊழல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். கபில் மிஸ்ராவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஊழல் தடுப்பு பிரிவை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “வாய்மையே வெல்லும்” என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.