மலையாள நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு தந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் திலீப். இதன் காரணமாக அவர் கேரள நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் மோகன்லால் சங்கத் தலைவராக வந்த உடன், திலீப்பை மீண்டும் உருப்பினராக சேர்த்துக்கொண்டார்கள்.
மோகன்லாலின் இந்த முடிவு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக நடிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகைகள் பாவனா, கீது மோகந்தாஸ், ரிமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகிய 4 பேரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்திலிருந்து விலகியுள்ளார்கள்.
இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினரிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முரளீதரன் கூறுகையில், “அம்மா அமைப்பின் தலைவராக நடிகர் மோகன்லால் தேர்வானதும் எடுக்கப்பட்ட முடிவு காரணமாக சங்கத்தில் உள்ள அனைவரும் சமம் என்பதற்குப் பதிலாக ஒரு சிலர் மட்டுமே உயர்ந்தவர்கள் என்கிற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் கேரள நடிகர் சங்கத்திலிருந்து 4 நடிகைகள் விலகியிருக்கும் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இனிமேலாவது மோகன்லால், நடிகர் சங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்’’ என்றார்.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் நடிகைகளின் செயலைப் பாராட்டியிருக்கிறார். “நடிகைகளின் இந்த முடிவு துணிச்சலானது” என அச்சுதானந்தன் பாராட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வி.டி..பல்ராம் உள்ளிட்டோரும் மூத்த தலைவர்களும் நடிகைகளின் துணிச்சலான முடிவை பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள்.