full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

முதல் அமைச்சருக்கே கடிதம்… கேரள நடிகைகளின் சுய மரியாதை!!

பொதுவாக இந்த சமூகமே ஆண்களுக்காகவென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பு தான். அதில் பெண்கள் தனியே முடிவுகளை எடுப்பதென்பது, இயலாத காரியம். அதிலும் குறிப்பாக திரைத்துறை என்று வரும்போது, அங்கு எப்ப்போதுமே நாயக நடிகர்களின் ஆதிக்கம் மட்டுமே நிலைத்திருக்கும். இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், சாண்டில்வுட் என்கிற எந்த விதமான பேதங்களும் கிடையாது.

அப்படி இருக்கிற சூழ்நிலையில், மலையாள திரைத்துறையில் நடிகைகள் கிளர்ந்தெழுந்திருப்பது ஆச்சர்யத்தைக் கிளப்பி இருக்கிறது. அதுவும் ஜாம்பவான் நடிகர், மிகப்பெரிய ஆளுமை மோகன் லாலுக்கு எதிராக அத்தனை நடிகைகளும் போர்க்கொடி உயர்த்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையை கடத்திய வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்தார் நடிகர் திலீப். ஆனால், மோகன்லால் புதிய தலைவராக பொறுப்பு ஏற்றதும் அந்த முடிவை மாற்றி, திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். இதனை எதிர்த்து தான் மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், பத்மபிரியா, ரேவதி உள்ளிட்ட பல நடிகைகள் சீறிக் கிளம்பி இருக்கிறார்கள். அதிலும், ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார்கள்.

இந்நிலையில், கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள அரசு சார்பில் சிறந்த மலையாள சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா வருகிற ஆகஸ்டு 8–ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மோகன்லாலை அரசு அழைத்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 107 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

“திரைப்பட விருது விழாவில் விருது அளிக்கும் முதல்வரும் விருதை வாங்கும் கலைஞர்களும் மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக இருக்க முடியும். மோகன்லாலை சிறப்பு விருந்தினராக அழைக்க கூடாது” என்று அந்த கடிதத்தில் வற்புறுத்தி உள்ளனர். மேலும் பல நடிகைகள் அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.