உலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ‘கிளிக்கி’ மொழியை இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.
கிளிக்கி மொழிக்காக மதன் கார்க்கி வடிவமைத்த எழுத்துக்கள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபோ நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தளத்தை இயக்குநர் SS ராஜமௌலி வெளியிட்டார். கற்பதற்கு உலகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கியின் தளம் வெளியிடப்படுகிறது. மூவாயிரம் சொற்களோடு ஆங்கில-கிளிக்கி-ஆங்கில ஒலி அகராதியும், தங்கள் பெயரைக் கிளிக்கியில் எழுதிப்பார்க்கும் கருவியும், மொழியைப் பயில காணொளிகளும், கணினித்திரையில் தட்டச்சுச் செய்ய மூன்று எழுத்துருக்களும்(fonts), சொற்களைக் கற்பதற்கான சொல் விளையாட்டுக்களும், பிற மொழிகளில் இருந்து கிளிக்கி மொழிக்கு ஒலிமாற்றும் கருவியும் இந்தத் தளத்தில் கிடைக்கும்.
கிளிக்கி மொழியில் பாடல்களும், கதைகளும், இலக்கண நூல்களும் விரைவில் வெளிவரும். கிளிக்கி மொழி பயில்வோருக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், சாதி, மதம், இனம், நாடு போன்ற எல்லைகளின்றி விரிந்து உலகை இணைக்கும் ஒரு மொழியாக கிளிக்கி மொழி இருக்கும் என்று நம்புகிறது. கிளிக்கி மொழியை பயில விரும்புவோர் www.kiliki.in என்ற இணைய தளத்தில் விலையின்றிக் கற்கலாம்.