கிங் ஆஃப் கொத்தா திரைப்பட விமர்சனம்
கேஜிஎப் தாக்கத்தில் வந்துள்ள மலையாள படம்தான் இந்த கிங் ஆஃப் கொத்தா. வாங்க படத்தை பற்றி பார்க்கலாம்.
கேரளா மாநிலத்தில் கொத்தா என்ற ஊரில் நடக்கும் கதை. அந்த ஊரில் தாதாவாக இருக்கும் சபீர் ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அங்க சர்க்கிள் இன்ஸ்பெக்டராக வருகிறார் பிரசன்னா. ஊரில் ரவுடியிச்சை ஒழிக்க சபீருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரசன்னா. ஆனால் அது எடுபடாமல் போகவே அங்கு பத்து வருடங்களுக்கு முன் ரவுடியாக இருந்து தற்போது ஊரைவிட்டு போன துல்கரை வரவழைக்கிறார். சபீரின் நண்பன் தான் துல்கர். ஊருக்கு வரும் துல்கருக்கும் சபீருக்கும் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.
அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படம் புதுமையான மலையாள படமாக உருவாகியுள்ளது. ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் சமீப காலமாக பான் இந்தியாவை ஆட்டிப்படைக்கும் டான், ரவுடியிச படமாக வந்துள்ளது. துல்கர் சல்மான் தனது அசால்ட்டான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். ரவுடியாக நடித்திருந்தாலும் அவரது முகத்தில் கொஞ்சம் பச்சை குழந்தை எட்டிப் பார்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். காதல், நட்பு, துரோகம் எல்லா உணர்வுகளையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக நடித்த சபீர் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சூப்பராக நடித்துள்ளார். இனி தமிழ் படங்களில் தனி வில்லனாக வில்லத்தனம் செய்ய வாய்ப்புகள் வரும். நண்பனாக வந்து துரோகியாக மாறினாலும் நட்புக்கும் துரோகத்திற்கும் இடையேயான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிதாக வேலையில்லை. பிரசன்னா தனது வேலையை நன்றாக செய்துள்ளார். துல்கரின் அப்பாவாக வரும் ஷம்மி திலகன், தங்கையாக வரும் அனிகா ஆகியோரின் நடிப்பு அருமை. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்தின் இமேஜை தூக்கி நிறுத்துகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளது. நிறைய கொடூரக் கொலைகளை குறைத்திருக்கலாம். மொத்தத்தில் கிங் ஆஃப் கொத்தா – கெத்து இல்லை. ரேட்டிங் 3.2/5