நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது

cinema news
0
(0)
முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார்.
 
உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் டிஸ்னி+  ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி களத்தில், மிகப்பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. உலகளாவிய கதைகளுடன், மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையைப் பொறித்துள்ளது. தமிழில் தொடர் பிளாக்பஸ்டர் படைப்புகளைத் தந்து வரும்  டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த “டாணாக்காரன்” படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் “O2”  திரைப்படத்தை,  ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடவுள்ளது.
தமிழின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா  நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம்  “O2”.  படத்தைக் காண்போரின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம், விரைவில் டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகவுள்ளது.
பல்வேறு இடைவிடாத பொழுதுபோக்கு  திரைப்படங்கள் மற்றும் பிரீமியம் தொடர்களை உலகளவில் வழங்கி வரும்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் “O2” திரைப்படத்தினை உலகமெங்கும் விரைவில் ஒளிபரப்பவுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.