காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவும் அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் – நடிகைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு திரையுலகினர் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நடிகர் சுமன் செய்தியாளர்களை சந்தித்த போது, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்கு திரைப்பட சங்கத்தினர் கூட்டம் நடத்தப்பட்டு, டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட இருப்பதாகவும், போராட்டத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ஆந்திராவின் உரிமையை நாம் கேட்கிறோம். புதியதாக ஒன்றும் இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு மாநில பிரிவினையின் போது அவர்கள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும்படி கேட்கிறோம். பிரதமர் மோடிக்கு, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான ஆலோசனை வழங்க வேண்டும் என வெங்கடேஸ்வர பெருமாளை வேண்டி கொண்டேன் என அவர் தெரிவித்தார்.