கோகுல் கிருஷ்ணா, அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், தவசி, பிரியா மோகன், நீனு மற்றும் பலர் நடிப்பில் பெட்டி சி கே மற்றும் பி ஆர் மோகன் தயாரிப்பில், அக்கா, தம்பி பாசத்தை உணர்த்தும் விதமாக, உதய் சங்கரன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’.
அப்பா இல்லாமல் அம்மா மற்றும் அக்கா பிரியா மோகனுடன் வாழ்ந்து வரும் நாயகன் கோகுல் கிருஷ்ணா தனது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக கேரளாவில் இரும்புக்கடை வைத்திருக்கும் அப்புக்குட்டியிடம் வேலைக்கு சேர்கிறார். அப்போது எதேச்சையாக சந்திக்கும் நாயகி நீனு மீது காதல் வயப்படுகிறார். நாயகி நீனுவும் ஒரு கட்டத்தில் கோகுல் கிருஷ்ணா மீதான காதலை வெளிப்படுத்துகிறார்.
இந்த தருணத்தில் கோகுல் கிருஷ்ணாவின் அக்காவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு விபத்தில் அக்காவுக்கு செவித்திறன் இழக்கிறாள். மருத்துவர் காது கேட்கும் கருவிக்கு ஒரு லட்ச ரூபாய் செலவாகும் என்கிறார்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அம்மாவும் இறந்துவிட அக்காவுடன் கேரளாவுக்கு செல்கிறார் கோகுல் கிருஷ்ணா. அப்போது தன் காதலி நீனுவைக் காணாமல் தவிக்கிறார். அவரைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் ஒருவரால் கோகுலும், அக்கா பிரியா மோகனும் தவறுதலாக குற்றவாளி என குற்றம் சாட்டப்படுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இருந்து கோகுலும், அவனது அக்காவும் தப்பினார்களா? கோகுல் தனது காதலி நீனுவை கண்டுபிடித்தாரா? அக்காவின் செவித்திறன் குறைபாட்டை தீர்த்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கோகுல் கிருஷ்ணா, நீனு, பிரியா மோகன், அப்புக்குட்டி என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான நடிகர்கள் தேர்வை சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர் உதய் சங்கரன். ஒவ்வொருவரும் மிகையில்லாத தங்களது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.
பிரியா மோகன் செவித்திறன் பாதிக்கப்பட்டவராக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அக்கா, தம்பி பாசத்தை கருவாகக் கையில் எடுத்து அதை உணர்வுப்பூர்வமான படமாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை அப்பட்டமாக திரையில் துணிச்சலுடன் காட்டியிருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியது.
வல்லவன் இசையில் காதலாகி பாடல் மிளிர்கிறது.
சினிமாவின் பார்வையில் ‘கொஞ்சம் கொஞ்சம்’- -~ ரசிக்கலாம்.