full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

கூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம்

மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் கூட்டத்தில் ஒருத்தன். பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய அதிகம் பேசுவார்கள். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை. அப்படி மிடில் பெஞ்ச் மாணவனாக இருக்கும் அசோக் செல்வன், தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறார்.

இவர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் முதல் பெஞ்ச் மாணவியான ப்ரியா ஆனந்தை காதலிக்கிறார். தனது காதலை ப்ரியா ஆனந்திடம் வெளிப்படுத்தும் அசோக் செல்வனிடம், தன்னை காதலிப்பதற்கு முன்பாக எதையாவது சாதித்துவிட்டு வர வேண்டும் என்று சொல்கிறார் ப்ரியா ஆனந்த்.

இதனால், சில வேலைகள் செய்து ப்ரியா ஆனந்த் மனதில் இடம்பிடிக்கிறார் அசோக் செல்வன். ஒருகட்டத்தில் அசோக் செல்வன், தனது சொந்த முயற்சியில் அந்த காரியங்களை செய்யவில்லை என்பது ப்ரியா ஆனந்துக்கு தெரிந்து விடுகிறது. இதனால், அசோக் செல்வனை விட்டு பிரிந்து செல்கிறார் அசோக் செல்வன்.

இறுதியில், தனது காதலி வெற்றி கண்டாரா? இல்லையா? அசோக் செல்வன் கூட்டத்தில் ஒருத்தனாக திகழ்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன் ஒரு மிடில் பெஞ்சராகவே வாழ்ந்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது நடிப்பு பாராட்டும் படி இருக்கிறது. சிறப்பான கதாபாத்திரத்தை தேர்வு செய்து அதில் தனது முழு பங்களிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரியா ஆனந்த், கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் அழகாக வந்து ரசிக்க வைக்கிறார். ப்ரியா ஆனந்துக்கும் ஓர் அழுத்தமான கதாபாத்திரம். சமுத்திரக்கனி ஒரு ரவுடியாக, அப்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். பால சரவணன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். மாரிமுத்து, அனுபமா குமார், ஜான் விஜய் கதாபாத்திரத்திற்கு ஏற்ப முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

மிடில் பெஞ்ச்சர்கள் எப்படி இருப்பார்கள், என்னென்ன செய்வார்கள், அவர்கள் சந்திக்கும் அவமானம், கஷ்டம் என அனைத்யைும் காதல், நட்பு என ஒரு கலவையாக சிறப்பாக இயக்கியிருக்கிறார் டி.ஜே.ஞானவேல். குறிப்பாக உணவை வீணாக்கக் கூடாது, உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், உணவின் முக்கியத்துவம் என்ன என்பதை ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

சினிமாவின் பார்வையில் `கூட்டத்தில் ஒருத்தன்’ சிறப்பானவன்.