உடுமலை சங்கர் கொலை வழக்கில் அவரது மனைவி கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு தொடர்பாக சங்கரின் மனைவி கெளசல்யா செய்தியாளர்களிடம் பேசிய போது, “என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைக்க ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்தேன். நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. மற்ற வழக்குகளை போல் இல்லாமல் என் வழக்கை தனித்துவமாக நீதிமன்றம் அணுகியது. இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, சாதிய கொலை வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமையும் எனறு நம்புகிறேன்.
குற்றவாளிகள் தப்பிவிட கூடாது என்று இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்ன குமார் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் உறுதியோடு வழக்காடுவேன் சளைக்க மாட்டேன். சங்கருக்கான நீதி இந்த தீர்ப்பு மட்டுமல்ல சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு.
தண்டனை பெற்றவர்களால் எனக்கு மற்றும் சங்கர் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனக்கு உறுதுணையாக இருந்த அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி,” என்று கூறினார்.