நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘களரி’. இந்த படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கிரண் சந்த்.
ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் படத்தைத் தொகுக்கிறார். பிரபல பின்னணி பாடகராக இருக்கும் வி வி பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கவிஞர் முத்துவிஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நந்தன் கலை இயக்கத்தை கவனிக்க, சண்டை பயிற்சியை ஸ்டன்னர் ஷாம் மேற்கொள்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது, “களரி என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்க்களம் தான். அதை மையப்படுத்தித் தான் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியைக் கதைக்களமாகக் கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்சன் என அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவரும் வகையிலும் ‘களரி’ உருவாகியிருக்கிறது.” என்றார்.