நடிகர் | ஜெய்க்குமார் |
நடிகை | ஜெனீபர் |
இயக்குனர் | சத்தீஷ்வரன் |
இசை | பிரசாந்த் |
ஓளிப்பதிவு | அருள் செல்வன் |
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி, மகன் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள்.
விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் ஜெய்க்குமார், ஜெனிபர் மகன் ஆகாஷுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், அந்த பகுதி கவுன்சிலரான கிரண் அங்கு மதுக்கடை ஒன்றை திறக்கிறார்.
இதையடுத்து ஊர்மக்கள் அனைவரும் ஊர்த் தலைவரான பாவா செல்லத்துரை தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். இதையடுத்து விரைவில் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறி மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். மதுக்கடையை மூட கிரண் நடவடிக்கை எடுக்காததால், பொறுப்புடன் செயல்பட்டு வந்த அந்த ஊரை சேர்ந்த பலரும் மதுவுக்கு அடிமையாகின்றனர். நாயகன் ஜெயக்குமாரும் குடிக்கு அடிமையாக, அவரது குடும்பம் மோசமான நிலைக்கு செல்கிறது.
கடைசியில் குடி மகிழ்ச்சியான அந்த குடும்பத்தை எந்த அளவுக்கு அழித்தது? குடியால் ஏற்பட்ட, ஏற்படும் பாதிப்பு என்ன? என்பதை சொல்லக்கூடிய படம் தான் குடிமகன்.
நாயகன் ஜெயக்குமார் காட்சிக்கு ஏற்ப பொறுப்போடு நடித்திருக்கிறார். பொறுப்பான இளைஞராக இருந்து போதைக்கு அடிமையாகி அவரது வாழ்க்கையே மாறும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பில் இன்னமும் அனுபவம் தேவை. நாயகி ஜெனிபர் இயல்பான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார். குடியில் இருந்து மீளும் கதாபாத்திரத்தில் பாலாசிங் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, மது பிரியராக வரும் வீர சமர் காமெடிக்கு கைகொடுத்திருக்கிறார். மகனாக நடித்திருக்கும் ஆகாஷும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
குடியால் தமிழகத்தில் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்படுள்ளது என்பதை சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் சத்தீஷ்வரனுக்கு பாராட்டுக்கள். மதுவால் ஏற்படும் தீமைகளை ஒரு கிராம பின்னணியில் ஒரு குடும்பத்தை வைத்து யதார்த்தமாக இயக்கியிருக்கிறார். குடியால் மதுபிரியர்களின் வாரிசுகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், அவர்களது எதிர்காலம் என்னவாகிறது என்பதையும் சொல்லும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார். எனினும் திரைக்கதையில் சுவாரசியத்தை கூட்டியிருந்தால் இன்னமும் கவர்ந்திருக்கலாம்.
பிரசாந்தின் பின்னணி இசை ஏற்கும் ரகம் தான். அருள் செல்வனின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகு மிளிர்கிறது.
மொத்தத்தில் `குடிமகன்’ வேண்டு(டா)ம்.