ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரிப்பில், நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’.
ஊருக்குள் மோசமான தாதாவாக இருக்கும் பி எல் தேனப்பனின் மரக்கடையில் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. ஆனாலும் இருவரும் ஒருவொருக்கொருவர் நட்புடன், நேசத்துடன் இருக்கின்றனர். இதற்கு மகன் விதார்த் உட்பட குடும்பத்தினரின் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் தேனப்பனுக்கு விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா.
இந்நிலையில், ஐந்து கோடி மதிப்புள்ள திருட்டு சிலையை சென்னையில் இருக்கும் குமரவேல் மூலம் விற்க முயற்சி செய்யும் தேனப்பன், அந்த சிலையை குரங்கு படம் உள்ள பையில் போட்டு பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். பாரதிராஜா, சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கும் விதார்த்துக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தாமலே வருகிறார்.
சென்னை வந்த பாரதிராஜாவிடம் அந்த குரங்கு பொம்மை பையை வாங்கிக் கொண்டு, தேனப்பனிடம் பாரதிராஜா வரவில்லை நாடகமாடுகிறார் குமரவேல். அதே நேரத்தில் சென்னைக்கு சென்ற பாரதிராஜா குறித்து எந்த தகவலும் இல்லை என்று மகன் விதார்த்துக்கு தகவல் கொடுக்கிறார் அம்மா ரமா. சிலை என்ன ஆனது என்று பதட்டத்தில் தேனப்பனும், அப்பாவைத் தேடி விதார்த்தும் தனித்தனியே களத்தில் இறங்குகிறார்கள்.
பாரதிராஜா கண்டுபிடிக்கப்பட்டாரா? குமரவேலின் நாடகம் பலித்ததா? இல்லை பொய்த்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா, தான் நடிப்பிலும் இமயம் என காட்டியிருக்கிறார். பாசமுள்ள அப்பாவாக, நேர்மையான தொழிலாளியாக, தேனப்பனின் விசுவாசமுள்ள நண்பனாக வெள்ளந்தியான கதாப்பாத்திரத்தில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். குறிப்பாக, அவர் தனக்கும், தேனப்பனுக்கும் இடையிலான நேசமிகு நட்பின் காரணத்தைச் சொல்லும் அந்த நீளமான வசனக் காட்சியில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி மெய்சிலிர்க்க வைக்கிறார்.
குற்றமே தண்டனை, கிடாரியின் கருணை மனு என வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களைக் கவரும் விதார்த், இந்த படத்திலும் கவர்ந்திருக்கிறார். நாயகி டெல்னா டேவிஸ் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
தேனப்பன் மிக யதார்த்தமான பேச்சு, நடிப்பு, வசனங்கள் என்று தனது கதாப்பாத்திரத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குமரவேல், இப்படத்தில் இதுவரை செய்யாத ஒரு வில்லத்தனமான கதாப்பாத்திரத்தில் தோன்றி, அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்கிறார்.
‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படம் மூலம் பலரது பாராட்டையும் பெற்ற இயக்குநர் நித்திலன். இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்து இருக்கிறார். படத்தில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்ததில் இயக்குனர் நித்திலனின் வேலை கணக்கச்சிதம்.
இரண்டொரு காட்சிகளே வரும் ரமா, பாலாசிங், ராஜா, கஞ்சா கருப்பு மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் கதாப்பாத்திரங்களும், அவர்களின் நடிப்பும் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றன.
இதில் திருடனாக வரும் அறிமுக நடிகர் கல்கியின் யதார்த்தமான நடிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இந்த புது வரவுக்கு வருங்காலம் வளமை தான்.
அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அருமை. இவரது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். உதயகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. அபினவ் சுந்தர் நாயகின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.
சினிமாவின் பார்வையில் ‘குரங்கு பொம்மை’ – வசீகரம்