குரங்கு பெடல் – திரைவிமர்சனம்

cinema news movie review
0
(0)

குரங்கு பெடல் – திரைவிமர்சனம்

சமீப காலமாக தமிழ் சினிமாவில் தரமான கதையம்சம் கொண்ட படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது அந்த வகை தமிழ் சினிமாவில் மேலும் ஒரு சிறந்த குழந்தைகள் பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் குரங்கு பெடல் தரமான படங்களை தயாரித்து வெளியிடும் சிவகார்த்திகேயனின் அடுத்த படைப்பு தான் இந்த குரங்கு பெடல்.

இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் காளி வெங்கட்,சந்தோஷ், வேல்முருகன்,ராகவன்,ஞானசேகர் சாய்,கணேஷ்,ரத்தேஷ்,பிரசன்ன பாலச்சந்தர் ஜான்சன் திவாகர்,தக்ஷணா சாவித்ரி,செல்லா குபேரன் மற்றும் பலர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் குரங்கு பெடல்.

சரி கதைக்குள் போகலாம் …

கோடை விடுமுறையை பல வழிகளில் கொண்டாடி தீர்க்கும் சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். சொந்த சைக்கிள் இல்லாததால் வாடகை சைக்கிள் எடுத்து கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

சைக்கிள் ஓட்ட தெரியாத காளி வெங்கட், தனது மகனின் சைக்கிள் ஆசையை புரிந்துக்கொள்ளாமல் காசு கொடுக்க மறுக்கிறார். ஆனால், எப்படியாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவரது மகன் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.

நடிகர் காளி வெங்கட் எந்த வேடத்தில் நடித்தாலும், அதன் எதார்த்தை திரையில் மிக அழகாக கொண்டுவரக் கூடியவர். அப்படி தான் இந்த படத்திலும் கந்தசாமி என்ற கிராமத்து மனிதராக எதார்த்தமாக நடித்திருக்கிறார். சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கிண்டல் செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அதன் வலியை ஒரு ஓரத்தில் வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது நிலையை சுட்டிக்காட்டி மகன் பேசும் காட்சியிலும் மனுஷன் மவுனமாக இருந்தே கைதட்டல் பெறுகிறார்.

 

முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் அதிஷ் ஆகியோர் உடல் மொழி, வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் கிராமத்து மண் மனம் மாறாமல் நடித்திருக்கிறார்கள்.

 

பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ஜென்சன் திவாகர் கொங்கு தமிழ் பேசி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். அதிலும், மிலிட்டெரி என்று கெத்தாக இருந்த பிரசன்னாவை பற்றிய உண்மை தெரிந்ததும், அவரை வெத்தாக்கும் ஜென்சனின் பேச்சுக்கள் அத்தனையும் சிரிப்பு சரவெடி.

 

சிறுவனின் அக்காவாக நடித்த தக்‌ஷனா, அம்மாவாக நடித்த சாவித்திரி, வாத்தியார் வேடத்தில் நடித்த செல்லப்பா, தோல் பாவை கலைஞராக நடித்த குபேரன் என அனைவரும் கொங்கு மாவட்ட கிராமத்து மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரன், கோடைக்காலத்தின் வெப்பத்தையும், கிராமத்து நீர் நிலைகளின் குளிர்ச்சியையும், புழுதி படர்ந்த நிலப்பரப்புகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

ஜிப்ரானின் இசையில், பிரம்மாவின் வரிகளில் பாடல்கள் கிராமத்து வாழ்க்கையையும், சிறுவர்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. எளிமையான பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வலிமை சேர்த்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் சிறப்பான பணி படத்திற்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார்.

 

எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ சிறுகதையை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் கமலக்கண்ணன் மற்றும் பிரபாகர் சண்முகம் சைக்கிள் ஒன்றை வைத்துக்கொண்டு கிராமத்து சிறுவர்களின் வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக பயணிக்க வைத்திருப்பதோடு, ரசிகர்களின் பழைய சைக்கிள் நினைவுகளை தட்டி எழுப்பியுள்ளனர்.

தற்போதைய தொழில்நுட்பக் காலக்கட்டத்தில் சிறுவர்கள் சிறுவர்களாக வாழ்வதில்லை என்ற குறையை மறந்து, இப்படியும் ஒரு காலம் இருந்தது, என்பதை சொல்லும் விதமாக இயக்குநர் கமலக்கண்ணன் காட்சிகளை வடிவமைத்திருப்பதோடு, சிறுவர்களின் போட்டி குணம் மற்றும் அதை எளிதில் மறந்துவிட்டு நட்பு பாராட்டும் மனம் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம் அழகு.

 

சைக்கிள் மூலம் கதை சொன்னாலும், அப்பா – மகன் இடையிலான பாசப் போராட்டம், தந்தையின் சைக்கிள் பயம், முறுக்கு சாப்பிடுவதற்காக திரைப்படம் பார்க்க கொட்டகைக்கு செல்லும் சிறுவன் ஆகியவற்றின் மூலம் அக்காலத்து கிராமத்து வாழ்வியலை அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கமலக்கண்ணன் ஒரு அமைதியான கிராமத்து வாழ்க்கை சூழலை கிராமத்து மக்கள் மட்டும் இன்றி நகரத்து மக்களும் கொண்டாடும்படி கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘குரங்கு பெடல்’ நம் குழந்தைகளின் பாடம் .

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.