full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா –  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

செப்டம்பர் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி ரவிசங்கர் யெலமஞ்சலி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி, நிர்வாக தயாரிப்பாளர் தினேஷ், இயக்குநர் சிவ நிர்வானா, நாயகன் விஜய் தேவரகொண்டா, ஒளிப்பதிவாளர் ஜி. முரளி, இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவாளர் ஜி முரளி பேசுகையில், ” குஷி திரைப்படம் நான் தெலுங்கில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இரண்டாவது படம். என்னுடைய திரையுலக பயணத்தை தெலுங்கில் ‘அந்தாலா ராட்சசி’ எனும் படத்தின் மூலம் தான் தொடங்கினேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் நாயகனான விஜயும், நானும் நீண்ட காலமாக நெருக்கமான நண்பர்கள். இயக்குநர் சிவ நிர்வானா உடன் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. அற்புதமான திறமைசாலி. நண்பர். இந்த படம் மறக்க இயலாத அனுபவத்தை அளித்திருக்கிறது. தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். தெலுங்கு திரைப்படங்களில் வாழ்க்கையை பற்றியும், அதன் ஜீவனுள்ள தருணங்களை பற்றியும் நேர்த்தியான படைப்புகளை வழங்குகிறார்கள். தெலுங்கில் எந்த ஜானரிலான படத்தை உருவாக்கினாலும்.. அதில் தங்களின் முத்திரையை பதிக்கிறார்கள். இதனால் தெலுங்கு திரையுலகம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறது. குஷி திரைப்படமும் முழு நீள பொழுதுபோக்கு சித்திரம். அற்புதமான காதல் கதை.” என்றார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில், ” குஷி படத்திற்காக இயக்குநரும் நானும் இதுவரை நேரகாலமின்றி, சோர்வின்றி உற்சாகமாக உழைத்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்புதான் இப்பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அடுத்த நாளே ஹைதராபாத்திற்கு வரவழைத்து, விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தை பற்றி விவரித்தார்கள். இயக்குநர் சிவ நிர்வானா சூழலை விவரித்து பாடல் வேண்டும் என்று கேட்டார். உடனடியாக பாடலை உருவாக்கிக் கொடுத்தேன்.

நான் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் ரசிகன். இருவரும் நடித்திருக்கும் குஷி படத்தில் இடம் பெற்ற பாடல் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. மகத்தான அன்பை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களுக்கும் பிரத்யேகமாக அன்பு செலுத்தி வரவேற்பு அளித்ததற்கு நன்றி. ” என்றார்.

தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசுகையில், ” இந்தியாவின் பல பகுதியிலிருந்து இங்கு வருகை தந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இப்படத்தின் முன்னோட்டம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்ன நம்புகிறேன். இந்தப் படத்தின் பாடல்களுக்கும், பாடலுக்கான காணொளிகளுக்கும் அளித்த ஆதரவிற்கு நன்றி. இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான நிகழ்வு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் உள்ள ஹெச் ஐ சி சி எனுமிடத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் செப்டம்பர் முதல் தேதியன்று வெளியாகிறது.” என்றார்.

இயக்குநர் சிவ நிர்வானா பேசுகையில், ” குஷி பயணம் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகிறது. உணர்வுபூர்வமான தருணங்கள்… கலவையான உணர்வுகள்… இந்தியா முழுவதும் பயணித்து மலை வாசஸ்தலங்கள், பனி பிரதேசங்கள் என வெவ்வேறு நிலவியல் அமைப்புகளில் பணியாற்றிய வித்தியாசமான அனுபவம்… இவையனைத்திலும் விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

எனது இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘மஜிலி’ வெளியானது. அதன் பிறகு குஷி வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறேன். ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக தான் குஷியை உருவாக்கி இருக்கிறோம்.

குஷி- காதல், கொண்டாட்டம் இதனை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. அதனால் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சியாக ரசிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

அர்ஜுன் ரெட்டி படம் வெளியான பிறகு, அவரது நடிப்பை பார்த்து வியந்து, விஜய் தேவரகொண்டாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை உருவாக்கவேண்டும் என்று விரும்பினேன். அவர் மீதான என் அன்பின் வெளிப்பாடு தான் ‘குஷி’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம். இந்த குஷி படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால்… நான் எந்த அளவிற்கு விஜய் மீது அன்பு வைத்திருக்கிறேன் என்பது வெளிப்படும். இதற்காக நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குஷி படத்தை உருவாக்கத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் தருணத்தில் நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்” என்றார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில், ” குஷி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக இந்தியாவின் பல பகுதியிலிருந்து அழகான ஹைதராபாத்திற்கு வருகை தந்திருக்கும் செய்தியாளர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் வருகை எங்களை கௌரவப்படுத்துகிறது. குஷி அற்புதமான திரைப்படம். இந்தியா முழுவதும் இருக்கும் ரசிகர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலான அன்பை முன்னிலைப்படுத்திய திரைப்படம். இப்படத்தின் கதை திருமணம் குறித்தும், உறவு குறித்தும், குடும்பம் எனும் அமைப்பின் மதிப்புக்குறித்தும் சுவாரசியமாக பேசுகிறது. இந்த திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசித்து, ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இதனிடையே ‘குஷி’ படத்தின் ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சி, இசைக் கொண்டாட்டமாக நடைபெறுகிறது என்பதும், இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஹைதராபாத்திலுள்ள ஹெச் ஐ ஐ சி மைதானத்தில்  நடிகர் விஜய்தேவரகொண்டா, சமந்தா, இசையப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், பிரபல முன்னணி பாடகர்கள், பாடகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இசை விருந்து அளிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://bit.ly/KushiTrailer