சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே நேரத்தில் அந்த பாதிரியாரை பார்க்க செல்லும் பெண் காணாமல் போகிறார். காணாமல் போன அந்த பெண்ணின் கணவரான பிரபல தொழிலதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரான விஜயகுமாரின் உதவியை நாடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை துணை ஆணையராக வரும் அருண் விஜய் அந்த பெண் மாயமானது குறித்த தீவிர விசாரணையில் இறங்குகிறார்.
அதே நேரத்தில் பாதிரியார் இறந்துவிட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கிறார் படத்தின் நாயகி மகிமா நம்பியார். அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது. எனவே இந்த சம்பவம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய் மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார்.
இந்த சம்பவம் குறித்து அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்வதால் மகிமாவின் பெற்றோர் கடுப்பாகின்றனர். இந்த நேரத்தில் மகிமாவை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி நாயகன் அருண் விஜய் கேட்க அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அருண் விஜய்-மகிமா இடையே காதல் மலர்கிறது. அப்போது, கொலை சம்பவம் குறித்த சில முக்கிய தகவல்களை அருண்விஜய்யிடம் மகிமா தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில் குழந்தை இல்லாமல் தவிக்கும் அருண் விஜய்யின் அண்ணியும், அமித் பார்கவியின் மனைவியுமான அபிநயா கர்ப்பம் தரிக்கிறாள். பின்னர் ஒருநாள் அபிநயா தூக்கு மாட்டி இறக்கிறாள். இந்த வழக்கையும் விசாரிக்கும் அருண் விஜய், தனது விசாரணையில் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்த முக்கிய தகவலை கண்டுபிடிக்கிறார். இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது யார்? அந்த குற்றவாளிகளை அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் த்ரில்லிங்கான மீதிக்கதை.
அருண் விஜய்யை பொறுத்தவரையில், முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படத்தில் விசாரணை காட்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து இடத்திலும் தேவையான நடிப்புகளை கொடுத்து, ஆர்ப்பாட்டம் இன்றி அழகாக நடித்திருப்பது சிறப்பு. குறிப்பாக தன்னுடைய அண்ணி உயிரிழப்பு குறித்த வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரியாக தனது அண்ணனையே விசாரிக்கும் அந்த காட்சியில் முத்திரை பதித்திருக்கிறார்.
மகிமா நம்பியார் படம் முழுக்க அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் நடிகையைப் போல் இல்லாமல், படம் முழுவதும் வலம் வருகிறார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி உள்ளது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மகிமா, தன்னால் முன்னணி நடிகர்களுடனும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
நடிகர் விஜயகுமார் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது அனுபவ நடிப்பின் முதிர்ச்சியை காட்டியுள்ளார். விசாரணையின் போது அருண் விஜய்யுடன் வரும் தம்பி ராமையா, தனக்குரிய மைண்ட் வாய்ஸ் பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். குறிப்பாக அரவிந்த் ஆகாஷ் கொலையின் போது அவர் பேசும் வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது.
மற்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் அபிநயா தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அபிநயாவின் நடிப்பும் அவரது பேச்சும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் வில்லன்களாக வரும் வம்சி கிருஷ்ணா மற்றும் அரவிந்த் ஆகாஷ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இருவருமே தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்துள்ளனர். சண்டைக் காட்சிகளிலும் சற்றும் பின்வாங்காத அவர்களது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.
இயக்குநர் அறிவழகன் தனக்குரிய ஸ்டைலில் குற்றம் 23 படத்தை தொய்வு ஏதுமின்றி சிறப்பாக இயக்கியுள்ளார். பெரிய படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் சிறிய அளவிலான பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கியுள்ள அறிவழகன் இந்த படத்தின் மூலம் தன்னை மீண்டும் திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.
படத்தில் இடம்பெறும் எந்த காட்சிகளும் ஒதுக்கும்படி இல்லாமல் அனைத்து காட்சிகளையும் அழகாக, நேர்த்தியாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் திருமணமாகி குழந்தையில்லாமல் தவிக்கும் பெண்களின் மனநிலையை தெளிவுபடுத்தியதில் அவர் நின்றிருக்கிறார். குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை அவர்களின் மாமியார் வார்த்தையால் நோகடிப்பது, அவர்களுக்கு என்னமாதிரியான வலியை கொடுக்கும் என்று அருண்விஜய் பேசும் வசனங்கள் அந்த வேதனையை அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறது. குழந்தை பெற, வசதியான பெண்கள் செய்யும் குற்றச் செயல்களையும் சிறப்பாக காட்டியுள்ளார்.
சாதாரண மெடிக்கல் குற்றப் பின்னணி கொண்ட படங்களைப் போல் இல்லாமல், ஒரு சிறந்த கதைக்களத்துடன் ரசிக்கும்படி சில தகவல்களை கூறி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. படத்தின் இசையைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் படத்தின் கதையை ஒட்டியே பாடல்களை அமைத்துள்ளது சிறப்பு. படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை மிரட்டியிருக்கிறார். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு வித்தியாசமான ஒளியில் அழகாக காட்சிகளை படம்பிடித்திருக்கிறார்.
சினிமாவின் பார்வையில் ‘குற்றம் 23’ குறை இல்லை.